தமிழ் சினிமாவில் தொடர்ச்சியான வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் சரண். அதே நேரத்தில் தமிழ் சினிமாவில் பல முக்கியமான நிகழ்வுகள் இவரை மையப்படுத்தி நிகழ்ந்திருக்கின்றன. அது என்னத் தெரியுமா?


காதல் மன்னன்


சரண் இயக்கிய முதல் படம் காதல் மன்னன். அஜித் குமார், மானு, விவேக், எம், எஸ் விஸ்வநாதன் ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஒரு பெண் இன்னொருவனின் மீது காதல் கொண்டால் எப்படி இருக்கும் என்கிற தனது மனக்குழப்பத்தை படமாக எடுத்ததன் விளைவுதான் காதல் மன்னம் திரைப்படம். திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இந்தப் படத்தின் வெற்றி இயக்குநர் சரணுக்கு மட்டுமில்லாமல் பலருக்கு முக்கியமானதானது. யார் யாருக்கு என்பதைப் பார்க்கலாம்.


நடிகராக அறிமுகமான எம்.எஸ், விஸ்வநாதன்


காதல் மன்னன் திரைப்படத்தில் தான் இசையமைப்பாளர் எம். எஸ், விஸ்வநாதன் முதல் முறையாக நடிகராக அறிமுகமானார். மெஸ்ஸு என்கிற கண்ணதாசன் ரசிகராக நடித்திருப்பார் எம்.எஸ்.வி. இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க தொடக்கத்தில்  மறுத்துள்ளார் எம்.எஸ்.வி. பின் நடிகர் விவேக்கின் வேண்டுகோளை ஏற்று இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தார்.இன்றுவரை அந்தக் கதாபாத்திரம் ஈடு செய்ய முடியாததாக நிலைத்து நிற்கிறது.


இசையமைப்பாளர் பரத்வாஜின் அறிமுகம்


இயக்குநருக்கு சரணுக்கு மட்டுமில்லை இசையமைப்பாளர் பரத்வாஜிற்கும் காதல் மன்னன் தமிழில்  முதல் படம். இந்தப் படத்தில் வெற்றிக்கு முக்கியக் காரணம் அவரது இடையும்கூட. இந்தப் படத்தைத் தொடர்ந்து பல முக்கியமானப் படங்களுக்கு இசையமைத்தார். ஆட்டோகிராஃப் படத்தில் இவர் இசையமைத்தப் ஒவ்வொரு பூக்களுமே பாடல் சிறந்த பாடகர் மற்றும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றது.


அஜித் குமார்


காதல் கோட்டை படத்தைத் தொடர்ந்து அஜித்  நடித்த ராசி, உல்லாசம், பகைவன், ரெட்டை ஜடை வயசு ஆகியப் படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வந்தன. அந்த நேரத்தில் அஜித்திற்கு ஒரு வெற்றிப்படம் கட்டாய தேவையாக இருந்தது. அந்த நேரத்தில் வெளிவந்தது தான் காதல் மன்னன் திரைப்படம். இந்தப் படத்தின் வெற்றி அஜித் மேல் தயாரிப்பாளர்களுக்கு இருந்த நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்டியது.


அஜித் மற்றும் ஷாலினி காதல்


காதல் மன்னன் படத்தைத் தொடர்ந்து சரண் மற்றும் அஜித் இணைந்தப் படம் அமர்க்களம். சிறிய வயதில் இருந்தே நடித்து வந்திருந்தாலும் நடிகை ஷாலினி அப்போது கல்லூரி படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். அமர்க்களம் படத்திற்காக அவரை நடிக்க அழைத்திருக்கிறார் சரண். ஆனால் மறுத்துவிட்டிருக்கிறார் ஷாலினி. சுமார் மூன்று மாத விடாப்பிடியான முயற்சிக்குப் பின் நடிக்க சம்மதித்திருக்கிறார் ஷாலினி. எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் என்னவென்றால் அமர்க்களம் படத்தின்போது தான் அஜித் மற்றும் ஷாலினிக்கு இடையில் காதல் மலர்ந்தது.


 சரண் தொடர்ந்து பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி , ஜே , ஜே, வசூல் ராஜா MBBS, அட்டகாசம் , வட்டாரம் ஆகிய பல வெற்றிப்படங்களை இயக்கியிருக்கிறார். இன்று அவருக்குப் பிறந்தநாள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் இயக்குநர் சரண்.