பிரபல பாடகரும் பஞ்சாப்பைச் சேர்ந்தவருமான யோ யோ ஹனி சிங்குக்கு கனடாவில் பதுங்கியிருக்கும் கேங்ஸ்டர் கும்பலிடம் இருந்து கொலை மிரட்டல் வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஹனி சிங்


பாங்க்ரா, ஹிப் ஹாப், ராப் இசை பாடல்களைப் பாடியும் இசையமைத்தும் பிரபலமானவர் பஞ்சாப்பைச் சேர்ந்த ‘யோ யோ ஹனி சிங்’. வட்டார மொழியில் இருந்து பாலிவுட்டில் அறிமுகமாகி பஞ்சாப் தாண்டி பட்டி தொட்டியெல்லாம் இவர் பிரபலமடைந்தவர்.


2012ஆம் ஆண்டு பாலிவுட் வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு பாடலுக்கு 70 லட்சம் ரூபாய் ஹனி சிங்குக்கு சம்பளம் வழங்கப்பட்டதாகத் தகவல்கள் பரவிய நிலையில், இசையமைப்பாளர் அனிருத், ஹனி சிங்கை அப்படியே குண்டுகட்டாகத் தூக்கி வந்து தமிழில் எதிர் நீச்சல் படத்தில் பாடவைத்தார். அனிருத் - ஹிப் ஹாப் ஆதி ஆகியோருடன், யோ யோ ஹனி சிங் இணைந்து பாடிய ‘எதிர் நீச்சலடி’ பாடல் இன்றளவும் பிரபலம்.


இந்நிலையில் யோ யோ ஹனி சிங்குக்கு பிரபல தாதாவான கோல்டி பிராரிடமிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. கனடாவில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படும் கேங்ஸ்டர் கோல்டி பிராரை, கனேடிய அரசாங்கம் அந்நாட்டில் தேடப்பட்டு வரும் முதல் 25 குற்றவாளிகளில் ஒருவராக பட்டியலிட்டுள்ளது.


‘அன்பை மட்டுமே பெற்று வந்தேன்’


இந்நிலையில் ஹனி சிங் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவில் கொலை மிரட்டல் சம்பவம் குறித்தும், தனக்கு பாதுகாப்பு கோரியும் புகார் அளித்துள்ளார்.  தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாடகர் ஹனி சிங், தனது முழு குடும்பமும் இந்த அச்சுறுத்தலால் பயப்படுவதாகவும், தான் மக்களிடம் இருந்து அன்பை மட்டுமே பெற்றதாகவும், தனக்கு முதல்முறையாக மிரட்டல் வந்துள்ளதாகவும் வேதனைத் தெரிவித்துள்ளார்.


சென்ற ஆண்டு மே 29ஆம் தேதி கொலை செய்யப்பட்ட பிரபல பாடகரான சித்துமூஸ்வாலாவின் கொலையிலும், கோல்டி பிரார் முக்கியக் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. கோல்டி பிராரின் நிஜப்பெயர் சதீந்தர்ஜீத் சிங். பிரபல பாடகர் சித்து மூஸ் வாலா கொலை வழக்கு முதலே தேடப்பட்டு வரும் கோல்டி ப்ரார் தற்போது தலைமறைவாக உள்ளார்.


கடந்த ஆண்டு கொல்லப்பட்ட பஞ்சாப் பாடகர்


இன்டர்போலின் கூற்றுப்படி, கொலை, குற்றவியல் சதி, சட்டவிரோத துப்பாக்கி விநியோகம் ஆகிய குற்றச்சாட்டுகள் கோல்டி பிரார் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் ரெட் கார்னர் நோட்டீஸூம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இனி பஞ்சாப் மாநிலத்தில் கேங்ஸ்டர் கலாச்சாரம் ஒழியும் எனவும், சித்து மூஸ்வாலா கைது செய்யப்பட்டார் என்றும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தார். ஆனால், கோல்டி பிராரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு மட்டுமே வருவதாகவும், அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் சென்ற மாதம் தகவல்கள் வெளியாகின.


அச்சுறுத்தும் தாதா


கனடாவில், இன்டர்போலின் ரெட் கார்னர் நோட்டீஸ் கொண்டு ஒரு நபரை கைது செய்வதற்கான அதிகாரம் அந்நாட்டு காவல் துறைக்கு இல்லை. ஒரு நபர் கனடாவில் குற்றம் செய்திருந்தாலோ, அதற்கு ரெட் கனேடிய கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தால் மட்டுமே ஒருவர் அந்நாட்டு காவல் துறை அதிகாரிகளால் கைது செய்யப்படுவார்.


கடந்த 2017ஆம் ஆண்டு பஞ்சாப்பில் இட்ந்து மாணவர் விசாவில் கனடா சென்று பிரபல தாதாவாக உருவெடுத்துள்ள கோல்டி பிரார் தொடர்ந்து பஞ்சாப்பில் உள்ள பிரபலங்களுக்கு அச்சுறுத்துலாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.