தமிழ்நாட்டில் பிறந்து சென்னையில் வளர்ந்து ஒரு முன்னணி டென்னிஸ் விளையாட்டு வீரராக தடம் பதித்தவர் அசோக் அமிர்தராஜ். தனது ஒன்பது ஆண்டு கால டென்னிஸ் விளையாட்டு பயணத்தில் இந்தியாவின் சார்பில் ஏராளமான விம்பிள்டன் போட்டிகள், அமெரிக்க ஓப்பன் விளையாட்டுகள் மற்றும் பல இன்டர்நெஷனல் டென்னிஸ் போட்டிகளிலும் விளையாடி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர். அசோக் அமிர்தராஜ் மட்டுமின்றி அவரின் சகோதரர்களான விஜய் அமிர்தராஜ் மற்றும் ஆனந்த் அமிர்தராஜ் இருவரும் பிரபலமான டென்னிஸ் வீரர்கள். பின்னர் ஹாலிவுட் திரைப்படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டிய அசோக் அமிர்தராஜ் ஏராளமான ஹாலிவுட் படங்கள் மற்றும் தமிழ் படங்களை தயாரித்துள்ளார்.
இந்தியாவிற்கு ஒரு அழகான பயணம் மேற்கொண்டு அமெரிக்கா திரும்பிய அசோக் அமிர்தராஜ் '25 years of jeans' குறித்து தனது நெகிழ்ச்சியை பகிரும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் மூலம் போஸ்ட் செய்துள்ளார். அதில் அவர் பேசுகையில் " 1998ம் ஆண்டு வெளியான என்னுடைய 'ஜீன்ஸ்' திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு மிக்க நன்றி. 25 ஆண்டு விழாவை கொண்டாடும் ஜீன்ஸ் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தை பிடித்தது. மேலும் அந்த ஆண்டுக்கான சர்வதேச அகாடமி விருதுகளில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பிரிவின் கீழ் இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட படம் என்ற பெருமையும் பெற்றது. ஹாலிவுட்டில் ஒரு சில படங்களை தயாரித்துள்ளேன். இருப்பினும் இந்திய சினிமாவைத் தயாரிக்கவும் விருப்பப்பட்டேன்.
அதற்கான நிறைய கதைகளை நான் கேட்டு வந்தேன். அப்போது இயக்குநர் ஷங்கர் ஒரு கதையுடன் என்னை வந்து அணுகினார். அந்த திரைக்கதை தான் 'ஜீன்ஸ்' படமாக வெளியானது. இப்படத்திற்கு நங்கள் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க வேண்டுமென விரும்பினோம். பிறகு ஹீரோயினாக உலக அழகி ஐஸ்வர்யா ராய் மற்றும் ஹீரோவாக பிரஷாந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். உலகெங்கிலும் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு பின்னர் 45 நாட்கள் லாஸ் ஏஞ்சல்ஸில் படமாக்கப்பட்டது. டிஸ்னி லேண்ட், லாஸ் வேகாஸ், கிராண்ட் கேனியன் மற்றும் உலகின் 7 அதிசயங்களான தாஜ் மஹால், ஈபில் டவர், சீன பெருஞ்சுவர், எகிப்தின் பிரமிட் என நம்ப முடியாததையெல்லாம் காட்சிப்படுத்தினோம். அந்த தலைமுறையினரை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அவர்களின் வாரிசுகள் மற்றும் இன்றைய தலைமுறையினரும் படத்தை பார்த்து விட்டு மெசேஜ், ஃபோன் கால், ஈமெயில் மூலம் இப்படம் குறித்து என்னை தொடர்பு கொள்கிறார்கள். ரசிகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்த படத்தை உங்களுக்கு அளித்ததில் மிக்க மகிழ்ச்சி" என தனது நெகிழ்ச்சியை வீடியோ மூலம் பதிவு செய்து இருந்தார் ஜீன்ஸ் படத்தின் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ். அவரின் இந்த வீடியோ போஸ்ட் தற்போது லைக்ஸ்களை குவித்து வருகிறது.