`பேவாட்ச்’ என்ற ஹாலிவுட் தொடரின் மூலமாக பெரும் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன் தனது ஐந்தாவது கணவர் டேன் ஹேஹர்ஸ்டை விவாகரத்து செய்வதற்காக மனுத்தாக்கல் செய்துள்ளார். டேன் ஹேஹர்ஸ்ட் பமீலா ஆண்டர்சனின் பாதுகாவலராகப் பணியாற்றியவர். 


பிரபல ஹாலிவுட் நடிகையான பமீலா ஆண்டர்சன் `ப்ளேபாய்’ இதழின் மாடலாக இருந்தவர். இவர் `பேவாட்ச்’ என்ற ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடரில் முன்னணி வேடத்தில் நடித்து அதன் மூலம் சர்வதேச அளவில் பிரபலமாக மாறினார். 


நடிகர் பமீலா ஆண்டர்சன் கடந்த 2020ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய தினத்தின் மாலையில் ரகசிய திருமண நிகழ்ச்சியில் டேன் ஹேஹர்ஸ்டைத் திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்து சுமார் 1 ஆண்டு முடிவடைந்த பிறகு, இந்தத் தம்பதியினர் விவாகரத்து செய்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 



பமீலா ஆண்டர்சன்


 


பிரபல ஆங்கில இதழான `ரோலிங் ஸ்டோன்’ இந்தச் செய்தியை முதலில் வெளியிட்டுள்ளது. அதில் இந்தத் தம்பதியினர் இடையிலான காதல் வாழ்க்கை முறிவுக்கு வந்துள்ளதாகவும், நடிகை பமீலா ஆண்டர்சன் தனியாக வாழ்வதைத் தற்போது விரும்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


கனடா நாட்டின் வான்கூவர் தீவுகளில் உள்ள பமீலா ஆண்டர்சனின் இல்லத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு நெருங்கிய நண்பர்கள், உறவினர் ஆகியோர் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சில மாதங்களாக காதலித்து வந்த பமீலா ஆண்டர்சனும், டேன் ஹேஹர்ஸ்டும் 2020ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 


கடந்த 1995ஆம் ஆண்டு, முதன்முதலாக மோட்லி இசைக் குழுவின் ட்ரம்ஸ் வாசித்த இசையமைப்பாளர் டாமி லீயைத் திருமணம் செய்து கொண்டார் நடிகை பமீலா ஆண்டர்சன். 1995ஆம் ஆண்டு முதல் 1998 வரை இந்தத் திருமண உறவில் இருந்த நடிகை பமீலா ஆண்டர்சனுக்கு இந்தத் திருமண உறவில் 2 குழந்தைகள் உண்டு. அடுத்ததாக 2006ஆம் ஆண்டு, அமெரிக்கப் பாடகரும், பாடலாசிரியருமான கிட் ராக்கை 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து, 2007ஆம் ஆண்டு அந்த உறவில் விவாகரத்து பெற்றார் நடிகை பமீலா ஆண்டர்சன். 



டேன் ஹேஹர்ஸ்டுடன் பமீலா ஆண்டர்சன்


 


அடுத்ததாக, அமெரிக்காவின் போக்கர் விளையாட்டு வீரரான ரிக் சாலமனை இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார் நடிகை பமீலா ஆண்டர்சன். 2007ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை நீடித்த இந்த உறவு, மீண்டும் 2014ஆம் ஆண்டு புதுப்பித்துக் கொள்ளப்பட்டது. எனினும், இந்தத் திருமணமும் 2015ஆம் ஆண்டு மீண்டும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. 


அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர் ஜான் பீட்டர்ஸைக் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்த நடிகை பமீலா ஆண்டர்சன், அந்த உறவை 12 நாள்களில் முறித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.