இன்றைய காலகட்டத்தில் பலரும் பன்முக திறமை கொண்டவர்களாக விளங்குகிறார்கள். அப்படி இசையமைப்பாளர், பாடகர், நடிகர், பாடலாசிரியர் என பன்முக கலைஞராக விளங்குபவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் திரைத்துறைக்கு இசையமைப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை துவங்கினார். அதை தொடர்ந்து மெல்ல நடிகராக களமிறங்கி தற்போது தன்னுடைய படங்களைத்தானே தயாரிக்கும் அளவுக்கு வளந்துள்ளார். தன்னுடைய அசாத்திய திறமையால் இன்று பிரபலமான பர்சனாலிட்டியாக விளங்கும் ஹிப்ஹாப் ஆதி இன்று தனது 34-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 



ஓவர் நைட்டில் வைரல் :


ஆதி மற்றும் ஜீவா Beatz என்ற இரு இசைக்கலைஞர்களால் உருவானதுதான் ஹிப்ஹாப் தமிழா. ராப் பாடலை ஆதி எழுத, ஜீவா Beatz பாட்டுக்கு மெட்டு போடுவார். இந்தியாவில் ராப் இசையை, சொல்லிசை என குறிப்பிட்டதில் முன்னோடி இவர்களே. ரேடியோ மிர்ச்சியில் முதல் முதலில் அவர்கள் இணைந்து பாடிய கிளப்புல மப்புல... என்ற பாடலின் காணொளி யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு ஒரே நாளில் லட்சக்கணக்கான லைக்ஸ்களை குவித்து ஓவர் நைட்ல வைரலாகி ஹிப்ஹாப் தமிழாவை பிரபலமாக்கியது. விமர்சனங்களும் வந்து குவிந்தன


ஆல்பம் முதல் பாடலாசிரியர் வரை :  


ஹிப்ஹாப் தமிழாவின் முதல் இசை ஆல்பம் 2012ம் ஆண்டு 'ஹிப்ஹாப்  தமிழன்' என்ற பெயரில் வெளியானது. இந்தியாவின் முதல் தமிழ் ஆல்பம் என்ற பெருமையையும் பெற்று அவர்களின் அடையாளமாகவும் மாறியது. பின்னர் பாடலாசிரியராக எதிர்நீச்சல் படத்தில் ஒரு சில வரிகளை எழுதி  பாடி இருந்தார். வணக்கம் சென்னை படத்தில் இடம்பெற்ற 'சென்னை சிட்டி கேங்ஸ்டா' பாடல் அதிரி புதிரி ஹிட் அடித்தது. கத்தி படத்தில் ‘பக்கம் வந்து’ பாடலை எழுதி பாடினார். அவரின் 'வாடி புள்ள வாடி' பாடல் இன்று வரை பிரபலமாக இருக்கும் சூப்பர்ஹிட் ராப் பாடல்.



இசையமைப்பாளராக அறிமுகம் :  


இப்படி மெல்ல மெல்ல சினிமா பக்கம் நுழைந்த ஆதிக்கு சுந்தர்.சியின் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான 'ஆம்பள' படத்தின்  இசையமைப்பாளராக அறிமுகம் கொடுத்தது. முதல் படமே அவருக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்று கொடுத்தது. அது வரையில் ஆல்பம் மூலமே அறியப்பட்ட ஆதி, இப்படத்திற்கு பிறகு அதிரடியான இசையமைப்பாளராக கொண்டாடப்பட்டார். அதன் வெற்றியை தொடர்ந்து இன்று நேற்று நாளை, தனி ஒருவன், அரண்மனை-2,கதகளி, கவண் உள்ளிட்ட படங்களின் மூலம்  அவரின் இசை ரசிகர்கள் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 


நடிகரான ஆதி : 


அடுத்த பரிணாமத்திற்கு தயாரான ஆதி, சுந்தர்.சி தயாரிப்பில் அவரே திரைக்கதை எழுதி, இசைமைத்து, இயக்கியதோடு ஒரு நடிகராக 'மீசைய  முறுக்கு' திரைப்படம் மூலம் அறிமுகமானார். தொடர்ச்சியாக நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், அன்பறிவு, வீரன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அரண்மனை 4 படத்திற்கு இசையமைப்பதோடு, கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் பிடி சார் என்ற படத்தில் நடித்து வருகிறார். 


மிகவும் துடிப்பான ஒரு இளைஞனாக தன்னை அடுத்த அடுத்த கட்டத்திற்கு முன்னோக்கி எடுத்து செல்லும் ஹிப்ஹாப் ஆதிக்கு மேலும் பல வாய்ப்புகளும், வெற்றிகளும், பாராட்டுகளும் இந்த பிறந்தநாளில் குவிய வாழ்த்துக்கள்.