ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள வா வாத்தியார் திரைப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜூன்லால் சுந்தரதாஸ் என்பவரிடம் இருந்து ஞானவேல்ராஜா வாங்கிய 21. கோடி78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடனை திருப்பி தரும்வரை படத்தை வெளியிடக்கூடாது என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது
வா வாத்தியார் படத்தை வெளியிட தடை
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள வா வாத்தியார் திரைப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாக இருந்தது. க்ரித்தி ஷெட்டி , ஆனந்தராஜ் , சத்யராஜ் , ராஜ்கிரண் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரின் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக படப்பிடிப்பில் இருந்து வந்த வா வாத்தியார் திரைப்படம் பல்வேறு போராட்டங்களுக்குப் பின் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இப்படியான நிலையில் வா வாத்தியார் படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
21 கோடி 78 லட்சம் கடம்
வா வாத்தியார் படத்தை தயாரித்துள்ள ஞானவேல்ராஜா கடந்த சில வருடங்களாக கடன் பிரச்சனைகளால் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறார். அர்ஜூன்லால் சுந்தரதாஸ் என்பவரிடம் ஞானவேல்ராஜா 10 கோடி கடனாக வாங்கியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு அர்ஜூன்லால் சுந்தரதாஸ் திவாலானதாக அறிவிக்கப்பட்டு அவருடைய சொத்துக்களை நிர்வகிக்க சொத்தாட்சிய அலுவலகத்தை நியமித்தது சென்னை உயர்நீதிமன்றம். ஞானவேல்ராஜா பெற்ற 10 கோடி ரூபாய் தற்போது வட்டியுடன் சேர்த்து 21 கோடி 78 லட்சத்து 50 ஆயிரம் ஆகியுள்ளதாகவும் இந்த பணத்தை செல்த்துவது வரை வா வாத்தியார் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என சொத்தாட்சியர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நேற்று டிசம்பர் 9 ஆம் தேதி நீதிபதிகள் எம்.எஸ் சுப்ரமணியம் மற்றும் சி குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஞானவேல்ராஜா வா வாத்தியார் படத்தின் ரிலீஸூக்கு முன்பு கனிசமான தொகையை செலுத்துவது குறித்து பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டது. இப்படியான நிலையில் இன்றைய விசாரணையில் , மறைந்த அர்ஜூன்லால் சுந்தரதாஸ்க்கு ஞானவேல்ராஜா தரவேண்டிய 21 கோடி 78 லட்சத்து 50 ஆயிரம் தொகையை செலுத்தும் வரை வா வாத்தியார் படத்தை திரையரங்கம் அல்லது ஓடிடியில் வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்படத்திற்காக இரண்டு ஆண்டுகள் காத்திருந்த ரசிகர்களுக்கு இது பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது