தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவில் உலகநாயகன் கமல்ஹாசனை நட்சத்திரம் எனக் கூறுவதைவிட கமல்ஹாசனை உச்சநட்சத்திரம் என்பதே பொருத்தமானதாக இருக்கும். பணம் சம்பாதிக்கும் நோக்கில் மட்டுமே சினிமாவில் நடிக்கும் கலைஞர்கள் அன்று முதல் இன்று வரை இருந்துகொண்டு இருந்தாலும், சினிமாவிற்காக தன்னை ஒப்புக்கொடுத்த கலைஞர்களில் கமல்ஹாசன் எப்போதும் முன்வரிசையில் தான் இருப்பார். ஜனரஞ்சகத்திற்கு பழக்கப்பட்ட தமிழ் சினிமா ரசிகர்களை மெல்ல மெல்ல உலக சினிமா தரத்திலான படங்களின் பக்கம் கவனத்தை திருப்பியவர் கமல்ஹாசன்தான். குறிப்பாக கமல்ஹாசன் கதை, திரைக்கதை, இயக்கம் என ஒரு படத்தில் எதாவது ஒரு பணியைச் செய்கிறார் என்றாலே அப்படம் பெரும் கவனத்தை ஈர்க்கும். இதற்கான எடுத்துக்காட்டுகளுக்கு பல திரைப்படங்களை நம்மால் வரிசைப்படுத்தமுடியும். 


அப்படியான படங்கள் காலத்தால் அழியாதவை. குறிப்பாக இப்படங்கள் சினிமாக்கள் இருக்கும்வரை கொண்டாடப்பட்டுக்கொண்டுதன் இருக்கும். அப்படியான ஒருபடம்தான் இந்த ஆகஸ்ட் மாதத்தில் பேசுபொருளாகியுள்ளது. கமல்ஹாசன் இயல்பாகவே ஒரு காந்தியவாதி. சுதந்திர இந்தியாவில் காந்தி கோட்சே எனும் தீவிரவாதியால் சுட்டுக்கொல்லப்பட்ட கதையை வேறு கோணத்தில் படமாக்கியிருப்பார். 


கடந்த 2000ஆம் ஆண்டு வெளியான இப்படம் வெளியாகி தற்போது 23 ஆண்டுகள் ஆகியுள்ளது. 2000-ஆவது ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் வெளியானது.  இந்த திரைப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்து வெளியிட்டு மாபெரும் வெற்றிப்படமாக மாற்றியவர் கமல்ஹாசன்.


தான் இயக்கி நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஏதோ ஒரு வித்யாசத்தை கொடுக்கும் வல்லமை உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களிடம் உள்ளது. இந்திய திரை உலகம் மட்டுமல்லாமல், உலக திரை வரலாற்றிலேயே திரை திரையில் உள்ள அத்தனை துறைகளிலும் பணியாற்றிய ஒரு மாபெரும் கலைஞன் அவர். 


இவர் இயக்கத்தில் வெளியான ஹே ராம் என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக மாறியது. இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் பல இந்தி திரையுலக நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படத்தில் இந்தித் திரையுலகின் ஷாரூக்கான் கேமியோ கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்திருப்பார். அதேபோல்  ஹேமமாலினி, ராணி முகர்ஜி, நஸ்ருதீன் ஷா, ஓம் பூரி மற்றும் தமிழ் நடிகர்கள் நாசர், டெல்லி கணேஷ் மற்றும் அப்பாஸ் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் என பெரும் பட்டாளமே நடித்திருந்தது. 


அதேபோல் இப்படத்தில்  நடிகர் நவாசுதீன் சித்திக் மற்றும் நடிகை சரண்யா பொன்வண்ணன் ஆகிய இருவரும் சின்னச் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்தின் நீளம் கருதி அவர்கள் நடித்து படமாக்கப்பட்ட காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டது. 


கமல்ஹாசன் திரைப்படங்களை  வைத்து சினிமா குறித்து வகுப்புகள் எடுக்கும் அளவிற்கு தரமான படங்களாக இருக்கும். அப்படியான படம்தான் ஹேராம். இந்த திரைப்படம் எந்த ஓடிடி தளத்திலும் இல்லாததால் இப்படத்தை பார்க்க நினைப்பவர்கள் என்ன செய்வது எனத் தெரியாமல் தடுமாறிவந்தனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி அதாவது, 77வது சுதந்திர தினத்தன்று, கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம் இன்ஸ்ட்யூட் யூட்டூப் தளத்தில் ரிலீஸ் செய்தார். இப்படம் வெளியிட்டு இன்றுடன் அதாவது ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதி 13 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.