தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக உலா வந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக நடித்து தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகை மீனா தவறவிட்ட மிகப்பெரிய படம் குறித்தும், அந்த வாய்ப்பு குறித்தும் கீழே விரிவாக காணலாம். 

தேவர்மகனை தவறவிட்ட மீனா:

இந்திய திரையுலகின் பெருமையாக கருதப்படும் கமல்ஹாசனின் ஆல் டைம் ஃபேவரைட் திரைப்படம் தேவர்மகன். இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு நாயகியாக கெளதமி மற்றும் ரேவதி நடித்திருப்பார்கள். ரேவதியின் கதாபாத்திரத்தில் நடிக்க முதன்முதலில் ஒப்பந்தமானவர் நடிகை மீனா ஆவார். அவர் தேவர்மகன் படத்தில் ஒப்பந்தமாகி பின்னர் படப்பிடிப்பிற்கு சென்று பின்னர் படத்தில் இருந்து விலகினார் என்பது நம்மில் பலரும் அறிந்திருக்க மாட்டோம். 

நடந்தது என்ன?

இதுதொடர்பாக மீனா கூறியிருப்பதாவது, தேவர்மகன் படம் நான் படப்பிடிப்பிற்கு சென்று முதல் நாளில் இரண்டு, மூன்று மேக்கப் போட்டார்கள். முதலில் சற்று கருப்பு நிறத்திற்கு மேக்கப் போட்டார்கள். அதன்பின்பு, மஞ்சள் தேய்த்து குளித்த மாதிரி ஒரு கெட்டப் போட்டார்கள். அந்த மாதிரி முயற்சி பண்ணார்கள். மேக்கப்பே இல்லாமல் ஒரு தோற்றத்திற்கு முயற்சி பண்ணார்கள். அதுக்கு அப்புறம் யாருமே மேக்கப் போடல. 

ஒரு கதாபாத்திரம் மட்டும் மேக்கப் இல்லாமல் இருந்தால் தனியா தெரியும்னு, அனைவருக்கும் மேக்கப் இல்லை என்று கூறிவிட்டார்கள். அதை எல்லாம் பண்ணிவிட்டு நாங்கள் அடுத்த நாள் படப்பிடிப்பிற்கு சென்றோம். படப்பிடிப்பிற்கு சென்று நாங்கள் சில காட்சிகள் கூட எடுத்து முடித்தோம். அதன்பின்பு, அன்று இரவு அவர்கள் அந்த ஷுட்டிங்கின் ரஷ் காட்சிகள் பார்த்துள்ளனர்.

திருப்தி அடையாத கமல்ஹாசன்:

கமல்ஹாசன் அந்த கெட்டப்களில் பெரியளவில் திருப்தி அடையவில்லை. அவரு நினைச்ச அளவுக்கு வரவில்லை. அடுத்த ஷுட்டிங்கில் பார்த்துக்கலாம்னு ஷுட்டிங் கேன்சல் பண்ணிட்டாங்க. அடுத்த ஸ்கெடியூல் பண்ணி திரும்ப ஷுட் பண்ணோம். அதே காட்சியை மீண்டும் படப்பிடிப்பு நடத்தினோம். அப்போ சில கருத்து வேறுபாடுகள். தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சில கருத்து வேறுபாடுகள்.

அன்று முழுவதும் ஷுட்டிங் பண்ணவில்லை. நாங்கள் காத்திருந்தோம். அடுத்த நாள் ஸ்கெட்டியூல் கேன்சல் பண்ணிவிட்டோம் என்றார்கள். மீண்டும் 10 நாட்கள் வீணானது. மீண்டும் அவர்கள் என்னிடம் தேதியை கேட்டபோது என்னால் கொடுக்க முடியவில்லை. 

இவ்வாறு அவர் கூறினார்.

மாபெரும் வெற்றிப்படம்:

கிராமத்து நாயகியாக மீனா என் ராசாவின் மனசிலே படத்திலும், எஜமான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எஜமான் படத்திலும் அவர் நடித்துள்ளார். 1992ம் ஆண்டு பரதன் இயக்கத்தில் சிவாஜிகணேசன், கமல்ஹாசன், ரேவதி, கெளதமி, நாசர், வடிவேலு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். 

ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருப்பார். என்பி சதீஷ் எடிட்டிங் செய்திருப்பார். இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருப்பார். இந்த படம் அந்தாண்டு வெளியான படங்களிலே மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.