நடிகர் ஹேமமாலினி மற்றும் பாடலாசிரியர் ப்ரசூன் ஜோஷி ஆகியோருக்கு இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட ஆளுமை விருது வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனை மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்துள்ளார்.வருடாந்திர இந்திய சர்வதேச திரைப்பட விழா இந்த ஆண்டு கோவாவில் 20 -28 நவம்பர் ஆகிய காலக்கட்டங்களில் நடக்கிறது. இந்த விழாவில் இருவருக்கும் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அமெரிக்க திரைப்பட இயக்குநர் மார்ட்டின் சாஸரேஸ் மற்றும் ஹங்கேரிய இயக்குநர் ஸ்வான் சாபோ ஆகியோருக்கு சத்யஜித்ரே விருதும் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதன்முறையாக இந்த விழாவில் ஆன்லைன் ஓ.டி.டி. தளங்களும் பங்கேற்க இருக்கின்றன.
நடிகர் ஹேமமாலினி, இந்தி, தமிழ் தெலுங்கு ஆகிய பல்வேறு மொழிகளில் நடித்துள்ள திரை ஆளுமை என்னும் அடிப்படையிலும் பாடலாசிரியர் ஃப்ரஷூன் ஜோஷி இந்தி திரையுலகப் பாடல்களுக்குப் பெருமை சேர்த்துள்ளதை அங்கீகரிக்கும் வகையிலும் இருவருக்கும் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபனா, ஹம் தும், டெல்லி 6, தாரே ஜமீன் பர், ரங் தே பசந்தி உள்ளிட்ட பல படங்களுக்கு ப்ரஷூன் ஜோஷி பாடல் எழுதியுள்ளார். இதுதவிர திரைக்கதை எழுத்தாளராகவும் சில படங்களில் இவர் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கான அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.