பாலிவுட் திரையுலகத்தில் பிரபலமான மூத்த நடிகையான ஹேமமாலினி பலரின் கனவு கன்னியாக விளங்கியவர் தனது திரையுலக பயணத்தை 60களில் தொடங்கினார். ஷோலே, சட்டே பே சத்தா, ட்ரீம் கேர்ள், சீதா அவுர் கீதா போன்ற ஏராளமான சூப்பர் ஹிட் பிளாக் பஸ்டர் படங்களில் நடித்துள்ளார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஹேமமாலினி 2004ம் முதல்முறையாக பாஜக கட்சியில் இணைந்து அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். திரையுலகம் மிகவும் சவாலான ஒன்றாக மாறிய பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் தனது ஆர்வத்தை குறைத்து கொண்டார்.


சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அவரை ஏராளமான ரசிகர்களை ஃபாலோ செய்கிறார்கள். 



சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் திரைத்துறையில் நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் அவர் சந்தித்த ஒரு அனுபவம் குறித்து அதிர்ச்சியான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார் ஹேமமாலினி. சத்யம் சிவம் சுந்தரம் திரைப்படத்தில் நடிக்க முதலில் தனக்கு அழைப்பு வந்ததாகவும் அதில் தன்னை நடிக்க வைக்க வேண்டும் என ராஜ் கபூர் மிகவும் விரும்பியதாக தெரிவித்துள்ளார். 1978ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 'சத்யம் சிவம் சுந்தரம்' திரைப்படம். ஷாஷி கபூர், ஜீனத் அமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இப்படத்தில் ஜீனத் அமன் கதாபாத்திரம் முதலில் ஹேமமாலினிக்கு வழங்கப்பட்டது. ராஜ் கபூர் இப்படத்தில் தன்னை நடிக்க வைப்பதற்காக அணுகிய போது "நீங்கள் அதை செய்ய மாட்டீர்கள் என்பது தெரியும் ஆனால் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும்" என கூறியுள்ளார்.


அந்த சமயத்தில் அருகில் இருந்த ஹேமமாலினியின் தாயார் தலையை ஆட்டி அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார். அப்படத்தில் அருவி காட்சி ஒன்றும் இன்றும் இளைய தலைமுறையினரிடையே பிரபலமாக உள்ளது. ஜீனத் அமன் இப்படத்தில் தனது திறமையான நடிப்பால் மிகவும் பிரபலமானார். அந்த வாய்ப்பை இழந்தது குறித்து மிகவும் வெளிப்படையாக ஹேமமாலினி நேர்காணலில் பேசியிருந்தார். 


இயக்குநர் பெயரை குறிப்பிடாமல், ஒரு காட்சியில் தனது சேலையின் முந்தானை கீழே வருவதற்காக பின்னை கழற்றுமாறு இயக்குநர் கூறியுள்ளார். தன்னுடைய சேலையின் முந்தானையை எப்போதுமே பின் செய்யும் பழக்கம் கொண்ட ஹேமமாலினி "பின்னை எடுத்தால் புடவையின் தளர்வான முனை கீழே சரியும் " என முணுமுணுத்துள்ளார் ஹேமமாலினி. அது தான் எங்களுக்கு வேண்டும் என இயக்குநர் கூறியுள்ளார். 


நடிகை ஹேமா மாலினி 1980ம் ஆண்டு பாலிவுட் பிரபலமான நடிகர் தர்மேந்திராவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஈஷா தியோல் மற்றும் அஹானா தியோல் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.