நடிகை கங்கனா தனது தொகுதியான மதுராவில் போட்டியிடுகிறாரா என எழுப்பப்பட்ட கேள்விக்கு நடிகை ஹேம மாலினி அளித்த பதில் நெட்டிசன்களின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. பிரபல இந்தி நடிகை ஹேமமாலினி கடந்த 2014, 2019ஆம் ஆண்டு தேர்தல்களில் பா.ஜ.க.வின் செல்வாக்கு மிக்க தொகுதிகளில் ஒன்றான மதுரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


முன்னதாக நடிகை கங்கனா ரணாவத் மதுராவின் பிருந்தாவன் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் சாமி தரிசனம் செய்ததோடு, சமீபத்திய தனது நேர்காணலில் தனக்கு அரசியல் கால் பதிக்கும் எண்ணம் உள்ளதாகவும் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் முன்னதாக மதுராவுக்கு வருகை தந்த ஹேமமாலினியிடம் கங்கனா மதுராவில் போட்டியிடப்போகிறாரா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.


இதற்கு பதிலளித்த எம்.பி ஹேமமாலினி அது கடவுளுக்கு தான் தெரியும். கிருஷ்ணர் அவருக்கு என்ன விருப்பமோ அதை செய்வார்” எனத் தெரிவித்தார்.


தொடர்ந்து "மதுரா தொகுதியில் திரைத் துறையை சார்ந்தவர்கள் தான் வெற்றி பெறுவார்கள். வேறு யாராவது போட்டியிட்டால் அவர்களை நீங்கள் வெற்றி பெறச் செய்ய மாட்டீர்கள்.


 






எதிர்காலத்தில் நடிகை ராக்கி சாவந்த் கூட இத்தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆக வரலாம், கடவுளை பொறுத்தது" எனத் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் ஹேம மாலினி தன் தொகுதிக்கு என்ன செய்தார் என்றும், நடிகையாக இருக்கும் இவருக்கே நடிகர்கள் தேர்தலில் போட்டியிடுவது வெறுப்பாக உள்ளதா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


 






 






கடந்த ஆண்டு மதுராவுக்கு வருகை தந்த கங்கனா ரனாவத் தான் எந்த ஒரு கட்சியையும் சார்ந்தவர் இல்லை என்றும் தான் தேசியவாதிகளுக்காக பரப்புரை செய்வேன் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.