”ஆரிரோ ஆராரிரோ, ஆனந்த யாழை மீட்டியவன், தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன், கனா காணும் காலங்கள், காதல் வைத்து, மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட அழகே” போன்ற பாடல் வரிகளால் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் நா. முத்துக்குமாருக்கு இன்று பிறந்த நாள். 


1975ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்த நா. முத்துக்குமார் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர். சிறுவயதிலேயே புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததால் என்னமோ, வருங்காலத்தில் அவரையே ஒரு புத்தகமாக அனைவரையும் படிக்க வைத்து விட்டார். சாதிக்க வேண்டுமென சென்னை வந்த முத்துக்குமாருக்கு முதலில் வாய்ப்பு கொடுத்தது பாலுமகேந்திரா தான். பாலு மகேந்திரவின் உதயாளராக இருந்த முத்துக்குமாருக்கு வெற்றிமாறனின் நட்பு கிடைத்துள்ளது. 


வெயிலில் அழகை பார்த்தவன்


தமிழ் திரையுலகில் தனது கவிதைகள் மூலமும்,  எதார்த்தமான பாடல் வரிகள் மூலமும் அனைவரது மனதையும் கொள்ளையடித்த நா. முத்துக்குமார் தேசிய விருதுகளை வாங்கி குவிந்தார். அழகை மட்டுமே கவிஞர்கள் கொண்டாடி கொண்டிருந்த காலத்தில், சேவல் படத்தில் “ மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட அழகு” என வெயிலிலும் அழகை பார்த்தவர். எப்பொழுதும் மழலைக்கு தாயின் தாலாட்டு மட்டுமே கேட்டு பழக்கப்பட்டவர்களுக்கு, தந்தையாலும் தாலாட்டு பாட முடியும் என்பதை தெய்வமகள் படத்தின் மூலம் ‘ ஆரிரோ ஆராரிரோ’ பாடி உணர்த்தி இருப்பார். 


தங்க மீன்கள் படத்தில் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்று ஒவ்வொரு மகளையும் அப்பாக்களால் கொண்டாட வைத்தார். தாயையும், தாயின் தியாகம் மற்றும் அன்பையும் கொண்டாடி எடுக்கப்பட்ட படங்களை பார்த்து கொண்டிருந்த தருணத்தில், கேடிபில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் “ தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே” என்ற பாடல்கள் வரிகள் மூலன் தந்தையின் அன்பை ஒவ்வொருவரின் ஆழ்மனதில் சென்று உணர வைத்தார். 


வேடிக்கை பார்ப்பவன்


தமிழ் திரையுலகில் காதலையும் தாண்டி தந்தை, தாய், மகளின் அன்பை எதார்த்தமான வரிகளில் காட்டி உறவுகளுக்கு உயிர் கொடுத்தவர். நா. முத்துக்குமார் மறைந்தாலும் “அணிலாடும் முன்றில், வேடிக்கை பார்ப்பவன்” புத்தகங்கள் மூலம் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 


இசைக்கு பாடலால் உயிர் கொடுத்தவன்


நா. முத்துக்குமாரின் பிறந்த நாளான இன்று, ”தமிழின் தலைமகன், பாடல் வரிகள் வற்றாத ஜீவநதி, மகள்களை பெற்ற அப்பாக்களுக்காக சர்வதேச தேசியக்கீதத்தை பெற்றெடுத்தவன், ஆனந்த யாழை மீட்டிய பாட்டுக்காரன், இசைக்கு தனது பாடல் வரிகளால் உயிர் கொடுத்தவன், பறவையே எங்கு இருக்கிறாய்..? உள்ளிட்ட வரிகள் மூலம் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கவிதையில் வாழும் கலைஞனுக்கு ஏபிபி சார்பிலும் பிறந்த நாள் வாழ்த்துகள்.