நடிகர் சூர்யா இன்று தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை ஒட்டி ரசிகர்கள் முதல் பிரபலங்களை வரை சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். ட்விட்டரும், ஃபேஸ்புக்கும் சூர்யாவுக்கான வாழ்த்துச் செய்திகளால் நிரம்பிக் காணப்படுகிறது.


சூர்யாவின் பிறந்தநாள் அவர் நடித்த திரைப்படங்களில் ஐந்து பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் படங்களைப் பற்றி அறிவோம்.


காக்க காக்க..
கவுதம் மேனன் இயக்கத்தில் காக்க காக்க உருவான கதையே மிகவும் சுவாரஸ்யமானது. கவுதம் மேனன் இந்தக் கதையை முதலில் பல முன்னணி நாயகர்களிடம் கூறினார். ஆனால், யாரும் முன்வராத நிலையில் வளர்ந்து வரும் நடிகர் சூர்யாவிடம் கதை சொல்லப்பட்டது. வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட சூர்யா, அன்புச்செல்வன் ஐபிஎஸ் ஆகவே வாழ்ந்திருப்பார். நெருப்பாய் தெறிக்கும் காவலராக அவர் ஜொலிக்க காக்க காக்க ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்தப் படத்தில் ஜோதிகா நாயகியாக நடித்திருப்பார். விறுவிறு கதைக்களம், ஹாரிஸ் ஜெயராஜின் துள்ளல் இசை, குறையாத ஆக்‌ஷன் என பாக்ஸ் ஆஃபிஸில் கல்லா கட்டியது சூர்யாவின் காக்க காக்க.




சில்லுனு ஒரு காதல்
காக்க காக்க திரைப்படத்துக்குப் பின்னர் சூர்யா பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்தார். அப்போதுதான் அவருக்கு என்.கிருஷ்ணா இயக்கத்தில் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இரண்டு அழகிய காதல் கதைகளில் காதல் ததும்ப வலம் வந்தார் சூர்யா. பூமிகாவும் சரி ஜோதிகாவும் சரி காதல்காரிகளாக ரசிகர்களைக் கவர்ந்திருப்பர். காதல் கதைக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இன்னும் மெருகேற்றியிருக்கும். நவீன கால காதல் களம் என்பதால் பார்வையாளர்கள் தங்களின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு இப்படத்தைக் கொண்டாடி அதை வெற்றிப்படமாக்கினர். வசூல் ரீதியாக சில்லுன்னு ஒரு காதல் நல்ல வரவேற்பைப் பெற்றது.




3.வாரணம் ஆயிரம்
கோலிவுட்டில் சூர்யா ஒரு அர்ப்பணிப்பான நடிகர் என்ற பெயரை அவர் பெற்றிருந்த நேரம் அது. அப்போது தான் மீண்டும் கவுதம் வாசுதேவ் மேனன் சூர்யாவைத் தேடி வந்தார். வாரணம் ஆயிரம் என்ற காதல் கதையை சூர்யாவிடம் சொன்னார். அப்பா, மகன் இரண்டுமே சூர்யா தான். அப்பாவுக்கு இணை சிம்ரன், மகன் வேட சூர்யாவுக்கு ஜோடி சமீரா ரெட்டி. படம் முழுவதும் கண்களுக்கு குளுமை. பாடல்களைச் சொல்லவா வேண்டும். ஹை மாலினி.. நான் இதைச் சொல்லியே ஆக வேண்டும் என்ற டயலாக் இன்றளவும் காதலர்களின் ரொமான்டிக் வாக்கியமாகவே உள்ளது. வாரணம் ஆயிரம் திரைப்படம் சூர்யாவின் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் பட்டியலில் இப்படித்தான் இடம் பிடித்தது.




4.அயன்
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா இணைந்த படம் தான் அயன். இந்தத் திரைப்படம் சூர்யாவுக்கு ஒரு திருப்புமுனை திரைப்படம். படம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது. 2009ல் வெளியான திரைப்படங்களில் அயன் படம் ஒன்று தான் ப்ளாக்பஸ்டர் மூவி என்றால் அது மிகையாகாது.  




5.சிங்கம்
சூர்யா என்றவுடன் கூடவே சிங்கம் படமும் நினைவுக்கு வருவதை யாராலும் தவிர்க்க முடியாது. சிங்கம் அடுத்தடுத்த பாகங்கள் விமர்சனத்துக்குரியவையே என்றாலும் கூட சிங்கம் முதல் பாகம் இயக்குநர் ஹரியின் முத்தாய்ப்பான படங்களில் ஒன்று. படம் முழுவதும் விறுவிறுப்பு, டயலாக் டெலிவரியில் கூட ஒரு வேகம் என்று படத்திற்கு இன்றளவும் ரசிகர்கள் இருக்கின்றனர். சிங்கம் சக்சஸ் தான் அதை இந்தியிலும் ரீமேக் செய்ய வழிகாட்டியது.




காக்க காக்க படத்தில் தோன்றிய போலீஸுக்கும், சிங்கம் போலீஸுக்கும் கடல் அளவு வித்தியாசம் காட்டியிருப்பார் நடிகர் சூர்யா. 


சூர்யாவின் திரைப்படங்களில் இன்னும் பல படங்களை வெற்றிப் பட்டியலில் அடுக்கலாம் என்றாலும் கூட இந்த ஐந்து திரைப்படங்களும் மிக முக்கியமானவை என்பதைக் கூறிக் கொண்டு சூர்யாவை வாழ்த்துவோம்.