தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரம் மறைந்த சில்க் ஸ்மிதாவின் பிறந்த்நாள் இன்று. 1960ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி ஆந்திர மாநிலம், ஏலூரு கிராமத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த விஜயலட்சுமி நான்காவது வரை மட்டும் படித்தவர். குடும்பத்தின் வறுமை காரணமாக சிறுவயதிலேயே பெற்றோர் விஜயலட்சுமிக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால் அந்த வாழ்க்கை மகிழ்ச்சியாக நீடிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து புதுவாழ்வு தேடி சென்னைக்கு வந்தார். 


திரைப்படங்களில் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த அவரை வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தில் சில்க் என்ற கதாப்பாத்திரத்தில் அறிமுகம் செய்தார் வினு சக்கரவர்த்தி. அவரது பெயரும் விஜயலட்சுமியில் இருந்து ஸ்மிதாவாக மாறியிருந்தது. அந்தப் படத்துக்குப் பின் மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சில்க் ஸ்மிதா என்ற பெயரில் நடிக்கத் தொடங்கினார். அவற்றில் பெரும்பாலானவை கவர்ச்சி வேடங்கள் தான். சில்க் ஸ்மிதாவை இன்று வரை கவர்ச்சி நடிகையாகவே உலகம் அடையாளம் காட்டுகிறது. ஆனால் அவருக்குள் இருக்கும் நடிப்புத்திறமை கொண்டு வந்த கதாபாத்திரங்கள் ஏராளம்!






ஆசை நூறுவகை, அடியேய் மனம் நில்லுனா நிக்காதடி, நேத்து ராத்திரி யம்மா உள்ளிட்ட பாடல்கள் எல்லாம் சில்க் ஸ்மிதா டான்ஸில் பட்டையை கிளப்பியது. ல்க் ஸ்மிதா ஒரு பாடலுக்கு ஆடினால் படம் ஹிட் ஆகிவிடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினார். சில இயக்குநர்கள் சில்க் ஸ்மிதாவை கவர்ச்சி பதுமையாகவும், சில இயக்குநர்கள் நடிப்பின் ராணியாகவும் பார்த்தனர். எந்த சினிமாவுக்கு ஆசைப்பட்டு வந்தாரோ, அதே சினிமாவை அவர் வெறுக்கவும் செய்தார்.


ஒரு நேர்க்காணலில், ‘நீங்கள் திரைத்துறைக்கு வராமல் இருந்திருந்தால் என்னவாகியிருப்பீர்கள் என்று சில்க் ஸ்மிதாவிடம் கேட்டபோது, “இத்துறைக்கு வரவில்லை என்றால் நக்சலைட் ஆகியிருப்பேன்” எனப் பேசியிருந்தார்.  மேலும் தான் கவர்ச்சியான கேரக்டர்களில் நடிக்காமல், நடிப்பதற்கு ஸ்கோப் இருக்கும் கேரக்டரில் நடித்ததால்  தான் மக்கள் மனதில் நல்ல இடம் கிடைத்துள்ளது எனவும் தெரிவித்திருந்தார். இப்படிப்பட்ட சில்க் ஸ்மிதாவுக்கு இன்று 63ஆவது பிறந்த தினமாகும். அவரது ரசிகர்கள் சில்க் ஸ்மிதா பற்றிய நினைவுகளை சமூக வலைத்தளங்களில் இன்று பகிர்ந்து வருகின்றனர். 


இப்படியான நிலையில், சில்க் ஸ்மிதா பற்றி வாழ்க்கை வரலாற்றுப் படம் ஒன்று உருவாகியுள்ளது. ஏற்கெனவே இந்தியில் “டர்ட்டி பிக்சர்” என்ற பெயரில் இவரின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாகியிருந்தது. இதில் சில்க் கேரக்டரில் நடிகை வித்யா பாலன் நடித்தார். தற்போது உருவாகியுள்ள இப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் உருவாகிறது. Silk Smitha the untold story என்ற பெயரில் இப்படம் உருவாகிறது. 


இந்தப் படத்தினை ஜெயராம் இயக்குகிறார். எஸ்.பி. விஜய், நிகில் முருகன், வம்சி சேகர் ஆகியோர் இணைந்து படத்தைத் தயாரிக்கின்றனர். 2024ஆம் ஆண்டு இப்படம் தியேட்டரில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.