இந்திய சினிமா ரசிகர்களால் “நேஷனல் கிரஷ்” என அன்போடு அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா இன்று தனது 26வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 


குடும்ப பின்னணி 


கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள விராஜ்பேட்டையில் சுமன் மற்றும் மதன் மந்தனா தம்பதியினருக்கு பிறகு ராஷ்மிகா கூர்க் பப்ளிக் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பையும், . பெங்களூரில் உள்ள எம்.எஸ்.ராமையா கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் உளவியல், இதழியல் மற்றும் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பயின்றார்.


நேஷனல் கிரஷ் ராஷ்மிகா


கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் சினிமாவில் ராஷ்மிகா அறிமுகமானார். அவரது அழகில் மயங்கிய ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவை முதல் படத்திலேயே ராஷ்மிகாவுக்கு வழங்கினர். தொடர்ந்து வெளியான அஞ்சனி புத்ரா, சதக்  ஆகிய படங்கள் அவருக்கு தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் வாய்ப்பை கிடைக்கச் செய்தது. தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் படம் அவருக்கு பல மொழிகளிலும் ரசிகர்ளைப் பெற்றுக் கொடுத்தது.


இதன்பின்னர் ராஷ்மிகாவின் மார்க்கெட் பயங்கரமாக உயர்ந்தது. 2020 ஆண்டு தெலுங்கில் அதிக வசூல் செய்த படமான சரிலேரு நீகேவ்வாரு, பீஷ்மா படங்கள், 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படம் என அவரின் புகழ் நாளுக்கு நாள் அதிகரித்தது. இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் தமிழிலும் ராஷ்மிகா எண்ட்ரீ கொடுத்தார். 2022 ஆம் ஆண்டு மட்டும் தெலுங்கில்  ஆடவல்லு மீக்கு ஜோஹார்லு, சீதா ராமம், இந்தியில் குட் பை ஆகிய படங்களிலும், 2023 ஆம் அண்டு தமிழில் நடிகர் விஜய்யுடன் வாரிசு படமும், இந்தியில் மிஷன் மஜ்னு படமும் அவருக்கு வெளியாகியுள்ளது. 2021 ஆம் ஆண்டு  ஃபோர்ப்ஸ் இந்தியாவின் சமூக ஊடகங்களில் மிகவும் செல்வாக்கு மிக்க பிரபலங்களின் பட்டியலிலும் ராஷ்மிகா இடம் பிடித்து அசத்தினார்.


ராஷ்மிகாவை சுற்றிய சர்ச்சை 


2016 ஆம் ஆண்டு நடிகை ராஷ்மிகா அறிமுகமான கிரிக் பார்டி படத்தில் ஹீரோவாக நடித்திருந்த ரக்‌ஷித் ஷெட்டியுடன் காதலில் விழுந்தார். 2017 ஆம் ஆண்டு இருவரும் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்ட நிலையில், அதன்பின்னர் தனிப்பட்ட காரணங்களால் இருவரும் பிரிந்தனர். ஆனால் கீதா கோவிந்தம் படத்தின் வெற்றி ராஷ்மிகாவுக்கு இந்திய திரையுலகில் குறிப்பிட்ட புகழை பெற்றுக் கொடுத்தது. இதனால் தான் அவர் திருமண வாழ்க்கைக்கு நுழைய மறுத்தார் என்ற விமர்சனமும் எழுந்தது. 


ரசிகர்களால் அன்போடு நேஷனல் கிரஷ் என அழைக்கப்படும் ராஷ்மிகாவின் நடிப்பு பல நேரங்களில் கடுமையான  விமர்சனத்தையும் சந்தித்துள்ளது. இது தொடர்பான பதிவில், “நான் என் வாழ்க்கையைத் தொடங்கியதிலிருந்து நிறைய வெறுப்புகளை பெற்று வருகிறேன். நிறைய ட்ரோல்களுக்கும் எதிர்மறைகளுக்கும் உண்மையில் பாதிக்கப்படுகிறேன். இங்குள்ள ஒவ்வொரு நபராலும் நேசிக்கப்பட வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதற்கு எதிர்மறை உங்கள் வெறுப்பை உமிழ்வது அல்ல. உங்களை மகிழ்விப்பது  எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.