தனது அறக்கட்டளையின் பெயரில் பொறியியல் மற்றும் கலை கல்லூரியில் சேரும் ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச உதவித்தொகை வழங்கப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் விளம்பரம் போலியானது எனவும் பொதுமக்கள் இதனை நம்பி ஏமாற வேண்டாம் என நடிகர் சூரி கூறியுள்ளார்.
நடிகர் சூரி
நடிகர் சூரி வெண்ணிலா கபடிக்குழு படத்தின் இடம்பெற்ற பரோட்டா சாப்பிடும் சீன் மூலம் தான் மிகவும் பிரபலமானார். அதிலிருந்து சூரியை ‘பரோட்டா சூரி’ என்று அடையாளம் கூறி அழைத்தார்கள். நடிகர் சூரி மதுரையை சேர்ந்தவர். இவருக்கு 44 வயதாகிறது. பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். முக்கியமாக சிவகார்த்திகேயன், சூரி காம்போவை ரசிகர்கள் மிகவும் விரும்பி பார்ப்பார்கள். சமீபத்தில் வெளியான அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், டான் ஆகிய படங்களில் சூரி நடித்திருந்தார். டான் படத்தில் பெருசு என்ற கதாபாத்திரம் சூரிக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து விடுதலை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக சூரி நடிக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
சூரி புகைப்படம் கொண்ட விளம்பரம்
இந்த நிலையில் தமிழ்நாட்டில் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள் முடிவடைந்ததை அடுத்து கல்லூரியில் மாணவர் சேர்க்கை அடுத்த மாதம் துவங்க உள்ளதால் பல கல்லூரி நிறுவனங்கள் தங்களது மாணவர் சேர்க்கை குறித்த விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் LM கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் நடிகர் சூரியின் புகைப்படத்தைப் பயன்படுத்தி விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், 2022 - 23ம் ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்றும் இது முற்றிலும் இலவசம் என விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலவச கல்வி ஊக்கத்தொகை
மேலும் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு இலவச கல்வி உதவித் தொகையும் வழங்கப்படும் என்றும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூரி பங்கேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விளம்பரம் போலியானது எனவும் பொதுமக்கள் இதனை நம்பி ஏமாற வேண்டாம் என நடிகர் சூரி கூறியுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் இந்த விளம்பரத்துக்கும், எங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
சட்டப்படி நடவடிக்கை
அந்த பதிவில் "இந்த புகைப்படம் நான் சென்ற ஒரு நிகழ்வில் எடுக்கப்பட்டது. அதை வைத்து இப்படி ஒரு விளம்பரத்தை உருவாக்கியுள்ளனர். விளம்பரம் செய்த நபர்களை அழைத்து இப்படி தவறான விளம்பரம் தர வேண்டாம் எனச் சொல்லி இருக்கிறோம். மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வியின் பெயரால் ஏமாற்ற வேண்டாம்
மேலும் கல்வி உதவி தேவைப்படுபவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை அவ்வப்போது செய்து கொண்டே இருப்பேன் என்றும் ஆனால் அதை இப்படி விளம்பரம் போது செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். கல்வி உதவியின் பெயரால் இப்படி தவறான விளம்பரம் தந்து புனிதமான கல்வியை விளம்பரம் ஆக்குவது இந்த சமுதாயத்திற்கு என்றுமே நல்லதில்லை என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்