பார்க்கிங்


ஹரிஷ கல்யாண் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் பார்க்கிங். எம்.எஸ். பாஸ்கர் , இந்துஜா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராம்குமார் பாலகிருஷ்ணன் தனது முதல் படமாக  எழுதி இயக்கிய படம் பார்க்கிங் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. 


படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்த நிலையில், ஜிஜூ சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒரு கார் பார்க்கிங் செய்வதில் இரண்டு நபர்களுக்கு இடையில் ஏற்படும் ஈகோ மோதல் எந்த அளவிற்கு செல்கிறது என்பதே இப்படத்தின் கதை. விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டு அமைந்த இப்படம் கடந்த ஆண்டு பெரிய வெற்றிபெற்ற படங்களில் ஒன்று.


ஐந்து மொழிகளில் ரீமேக்


பார்க்கிங் படத்தின் கதை மொழிகளை கடந்து எல்லா மனிதரும் தொடர்புபடுத்திக்கொள்ளக் கூடிய ஒரு கதை என்பதால் இப்படத்திற்கு தமிழ் தவிர பிற மாநிலங்களில் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தை தமிழ் தவிர்த்து மொத்தம் ஐந்து மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமம் விற்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.


இதில் நான்கு இந்திய மொழிகள் உட்பட ஒரு அயல்மொழி ரீமேக்கும் அடக்கம். இதனைத் தொடர்ந்து தற்போது பார்க்கிங் படத்திற்கு மற்றொரு சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது.


ஆஸ்கர் நூலகத்தில் பார்க்கிங் திரைக்கதை






பார்க்கிங் படத்தின் திரைக்கதை பிரதியை உலகப் புகழ்பெற்ற ஆஸ்கர் விருதுகளை வழங்கும் ஆஸ்கர் அகாடமி தங்களது நூலகத்தில் பத்திரப்படுத்தி வைக்க கேட்டுள்ளது.


உலகத்தின் மிகச் சிறந்தப் படங்களின் திரைக்கதை பிரதிகள் இந்த நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. இந்த வரிசையில் பார்க்கிங் படத்தின் திரைக்கதையும் அதில் இடம்பெற இருக்கும் தகவலை படக்குழு பகிர்ந்து கொண்டுள்ளது. பார்க்கிங் படக்குழுவினருக்கு தமிழ் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்