சனாதனம் பற்றி தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு பாடகரும், இசையமைப்பாளருமான ஹரிஹரன் பதிலடி கொடுத்துள்ளார். 


இதுதொடர்பாக நேர்காணல் ஒன்றில் அவரிடம், “கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டும்” என்று உதயநிதி ஸ்டாலின் பேசியது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஹரிஹரன், “இந்தியாவில் பல்வேறு வகையான மக்கள் பல்வேறு கலாச்சாரங்கள், நம்பிக்கைகளை பின்பற்றி வாழ்கிறார்கள். அந்த நம்பிக்கையை தப்பு என சொல்லும் விஷயங்களில், குறை சொல்பவர்கள் மீது தான் தவறு உள்ளது. நமது தேவைகள், நம்பிக்கைகள் என்ன என்பது நம் மனதுக்கு தெரியும். அனைத்தையும் ஏற்றுக்கொள்வதே சனாதான தர்மம்” என தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 






உதயநிதி பேசியது என்ன?


கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சென்னை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக  பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ‘சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. எப்படி கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஒழித்துக்கட்ட வேண்டுமோ அப்படித்தான் சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே சரியாகும். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானதுசனாதனம் என்றால் நிலையானது, அதாவது எதையும் மாற்ற முடியாதது என்பது பொருள். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும்” என தெரிவித்திருந்தார். 


உதயநிதியின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாநில தலைவர்கள் தொடங்கி பாஜகவின் தேசிய தலைவர்கள் வரை தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். டெல்லியில் உள்ள காவல் நிலையத்தில் கூட புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில் கருத்து தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, “சனாதன தர்ம சர்ச்சையின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது கடமை தவறிய செயல்” அதிருப்தி தெரிவித்தார். ஆனால் தான் சனாதனம் குறித்து பேசியதில் தவறில்லை. திரும்ப திரும்ப பேசுவேன் என உதயநிதி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.