வசூலில் சொதப்பிய ஹரிஹர வீர மல்லு
பவன் கல்யான் நடித்துள்ள ஹரிஹர வீர மல்லு திரைப்படம் கடந்த ஜூலை 25 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியது. பல்வேறு ஹிட் படங்களை தயாரித்த ஏ.எம் ரத்னம் இந்த படத்தை ரூ 300 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளார். 5 ஆண்டுகள் படப்பிடிப்பி இருந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியான ஹரிஹர வீர மல்லு திரைப்படம் முதல் நாளிலே கடுமையான நெகட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது. இதனால் முதல் நாளைக் காட்டிலும் இரண்டாவது நாளில் படத்தின் வசூல் 80 சதவீதமாக குறைந்துள்ளது.
முதல் நாளில் இப்படம் உலகளவில் ரூ 67 கோடி வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டது. ஆனால் நெகட்டிவ் விமர்சனங்கள் படத்தின் வசூலை பெரியளவில் பாதித்துள்ளன. இரண்டாவது நாளில் ரூ 10 கோடி மட்டுமே படம் உலகளவில் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் திரையங்க விநியோக உரிமை ரூ 100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக ரூ 255 கோடி வசூலித்தால் மட்டுமே தயாரிப்பாளருக்கு பிரேக் ஈவன் எட்ட முடியும் என்கிற நிலையுள்ளது. மொத்தமாக இரண்டு நாட்களில் ஹரிஹர வீர மல்லு திரைப்படம் ரூ 77 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. பல்வேறு நிதி நெருக்கடிக்கு மத்தியில் இப்படத்தை தயாரித்துள்ள ஏ.எம் ரத்னம் அவர்களுக்கு இப்படம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது
யார் இந்த ஏ.எம் ரத்னம்
நடிகை விஜயசாந்தியின் மேக் அப் மேனாக சினிமாவில் தனது கரியரை தொடங்கியவர் ஏ.எம்.ரத்னம். ஒரு சில படங்களுக்கு கதை , திரைக்கதையும் எழுதியுள்ளார். இந்தியன் , நட்புக்காக , காதலர் தினம் , குஷி , ரன் , தூள் , கில்லி , சிவகாசி , ஆரம்பம் , என்னை அறிந்தால் , வேதாளம் போன்ற பல ஹிட் படங்களை தயாரித்தவர் ஏ. எம் ரத்னம். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கில் இவர் தயாரித்தும் டப்பிங் செய்து வெளியிட்ட படங்களும் வசூல் ரீதியாக பெரும் வெற்றிபெற்றன. இடைபட்ட காலத்தில் இவர் தயாரித்த பங்காரம் , ஆக்ஸிஜன் , கருப்பன் போன்ற படங்கள் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்ததால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கினார். இந்த படங்களின் தோல்வியால் விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டு ஹரிஹர வீர மல்லு படத்தின் ரிலீஸூக்கு முன் கன்னட திரைப்பட சபையில் புகாரளித்தன. தனது கடன் பிரச்சனைகளை தீர்க்க ஹரிஹர வீர மல்லு படத்தின் வெற்றியை பெரிதும் சார்ந்திருந்தார் ஏ.எம் ரத்னம். இப்படியான நிலையில் ஹரிஹர வீர மல்லு திரைப்படம் வசூல் சரிவை சந்தித்து வருகிறது. ஏ.எம் ரத்னமின் வீடியோ ஒன்றும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அவரிடம் பத்திரிகையாளர் படத்தின் ரெஸ்பான்ஸ் பார்த்து மகிழ்ச்சியா என்று கேட்கிறார். ஆனால் அதற்கு பதிலேதும் சொல்லாமல் ஏ எம் ரத்னம் கடந்து செல்கிறார்.