Actor Mohan : என்னை நடிக்க என்கரேஜ் பண்ணது பாலுமகேந்திராதான்... நினைவுகளை பகிர்ந்த மோகன்

தன்னை முதல் முறையாக நடிக்க ஊக்கப்படுத்தியவர் இயக்குநர் பாலுமகேந்திரா என்று நடிகர் மோகன் தெரிவித்துள்ளார்

Continues below advertisement

மோகன்

கோகிலா என்கிற கன்னட படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் மோகன். பாலுமகேந்திரா , மணிரத்னம் , மகேந்திரன் என தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்துள்ளார். மெளன ராகம் , நெஞ்சத்தை கிள்ளாதே ,பயணங்கள் முடிவதில்லை , ரெட்டை வாள் குருவி , கோபுரங்கள் சாய்வதில்லை என அடுத்தடுத்து சில்வர் ஜுப்லி ஹிட் கொடுத்திருக்கிறார்.

Continues below advertisement

தற்போது கிட்டதட்ட 14 ஆண்டுகள் கழித்து மோகன்  நாயகனாக நடித்துள்ள படம் ஹரா. விஜய் ஸ்ரீ இயக்கியுள்ள இப்படத்தில் அனுமோல் , யோகிபாபு , மொட்ட ராஜேந்திரன் , சாரு ஹாசன் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் ஹரா வரும் ஜூன் 7-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

ஹரா படம் தவிர்த்து வெங்கட் பிரபு இயக்கி வரும் விஜயின் தி கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மோகன் நடித்துள்ளார். சமீபத்திய யூடியூப் நேர்காணல் ஒன்றில் தனது திரை வாழ்க்கை தொடங்கிய பின்னணியை நடிகர் மோகன் பகிர்ந்துகொண்டார். தன்னை நடிகராக ஊக்கப்படுத்தியது தனது முதல் படத்தின் இயக்குநர் பாலுமகேந்திராதான் என்று மோகன் இந்த நேர்காணலில் பகிர்ந்துகொண்டார். 

நாடகத்தில் இருந்து சினிமாவிற்கு..

நான் பெங்களூரில் கல்லூரி படித்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய நண்பன் நாகத்தின் மேல் ஈடுபாடு கொண்டிருந்தார் . ஒருநாள் எங்கள் கல்லூரிக்கு பிரபல நாடக ஆசிரியர் பி.வி காரந்த் மற்றும் எழுத்தாளர் லங்கேஷ் வந்திருந்தார்கள்.

என்னை பார்த்த பி.வி காரந்த் நீங்க ஏன் நாடகத்தில் நடிக்க கூடாது என்று சொல்லி எனக்கு ஒரு சின்ன கதாபாத்திரம் நடிக்க கொடுத்தார்கள். அப்படி கல்லூரி காலத்திற்கு பிறகு நான் அந்த நாடகக் குழுவில் நடித்து வந்தேன். ஒரு முறை மும்பையில் ஒரு நாடகத்தில் நடிக்க சென்றிருந்தோம் அப்போது அந்த நாடகத்தில் நடிக்க வேண்டிய மற்ற நடிகர்கள் இல்லாத காரணத்தினால் எனக்கு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

 நீ பெரிய ஸ்டார் 

அந்த நாடகக் குழுவில் இருந்தவர் தான் ஜி.வி சிவானந்த். அவரைப் பற்றி எனக்கு அப்போது எதுவும் தெரியாது. அவர் என்னிடம் வந்து ’நீங்க நல்ல நடிக்கிறீங்க ஏன் சினிமாவில் முயற்சி செய்துபார்க்க கூடாது’ என்று கேட்டார். நான் அப்போது எல்லாரையும் போல் பேங்க் வேலைகளுக்கு படித்துக்கொண்டு இருந்தேன்.

பாலு மகேந்திரா என்கிற ஒருவர் கன்னடத்தில் படம் எடுக்க இருப்பதாகவும் அதில் தான் துணை இயக்குநராக இருப்பதாகவும் சொல்லி என்னுடைய புகைப்படம் ஒன்றை வாங்கிக் கொண்டு போனார் சிவானந்த். நான் சின்ன வயதில் என்னுடைய பெற்றோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைக் கொடுத்தேன்.

கோகிலா படத்திற்காக பாலுமகேந்திராவிடம் நிறைய நடிகர்களின் புகைப்படங்கள் வந்திருந்தன. ஆனால் அவர் என்னுடைய சின்ன வயது ஃபோட்டோவை பார்த்து என்னுடைய அன்றைய வயதில் எடுத்த ஃபோட்டோவை கேட்டார்.

என் வீட்டில் என்னால் காசு கேட்க முடியாது என்பதால் சிவானந்த் தன்னுடைய செலவில் என்னை ஃபோட்டோ எடுத்து அதை பாலுமகேந்திராவிடம் காட்டினார். பாலுமகேந்திரா உடனே என்னை தேர்வு செய்துவிட்டார். 

முதல் நாளில் என்னை தனது கேமராவில் ஃபோட்டோ எடுத்துக் கொண்டே பாலுமகேந்திரா ‘உன்னால் நடிக்க முடியுமா’ என்று கேட்டார். நான் எனக்கு தெரியவில்லை என்றேன். ”மார்க் மை வர்ட்ஸ் நீ பெரிய ஸ்டாரா வருவ” என்று அவர்தான் நான் நடிக்க முடியும் என்கிற நம்பிக்கையை எனக்கு கொடுத்தார்” என்று மோகன் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola