உலகம் முழுவதும் காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காதலுக்கு வயது தடையில்லை என்றாலும், எல்லா காதலும் வெற்றியில் முடிவதில்லை. வெற்றி பெறும் எல்லா காதலர்களும் வாழ்க்கையின் கடைசி வரை ஒன்றாக செல்வார்களா என்றாலும் அதுவும் கேள்விக்குறி தான். ஆனாலும் நாம் காதல் செய்யவே விரும்புகிறோம்.


அதற்கான காரணங்கள் வெவ்வேறாக இருந்தாலும், சில நேரங்களில் நம்மை சுற்றிலும் நாம் காண்கிற சில மனிதர்கள் நமக்கு ஒரு ரோல் மாடலாக இருப்பார்கள். கலையுலகம் ஏராளமான காதலர்களை கண்டுள்ளது. ஆனால் தமிழ் சினிமாவின் காதல் ஜோடிகள் என்றால் சட்டென நினைவுக்கு வருபவர்களில் ஒரு தம்பதி அஜித் - ஷாலினி தம்பதியினர். இவர்களுக்குள் காதல் எப்படி நுழைந்தது? என்பதே ஒரு சுவாரஸ்ய கதை தான்...


குழந்தை நட்சத்திரமாக 55 படங்களில் நடித்த ஷாலினியை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. சிவாஜி, ரஜினி, அர்ஜூன் என பலரின் படங்களிலும் அவர் குழந்தை நட்சத்திரமாக  நடித்துள்ளார். ஆனால் ஹீரோயினாக அவர் 7 படங்களில் மட்டுமே நடித்திருந்தார். 1997 ஆம் ஆண்டு அனியாத்தி ப்ரவு என்ற மலையாளப்படத்தில் தான் ஷாலினி ஹீரோயினாக எண்ட்ரீ கொடுத்தார். இதுவே தமிழில் விஜய் நடிப்பில் காதலுக்கு மரியாதையாக வெளியாகி ஷாலினியும் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகியிருந்தார். முதல் படமே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைக்க காரணமாயிருந்தது.








அஜித்துடன் காதல் 


1997ல் வெளியான காதலுக்கு மரியாதைக்கு பின் ஷாலினி அடுத்த ஓராண்டு  மலையாளத்தில் மட்டுமே கவனம் செலுத்தினார். தமிழில் இரண்டாவது படமாக அவருக்கு அஜித் நடித்த அமர்க்களம் படம் அமைந்தது. இதுவே அஜித் - ஷாலினி இருவரின் காதலுக்கும் பிள்ளையார் சுழி போட்டது. 


அதாவது அமர்க்களம் படத்தில் ஷாலினி “சொந்தக்குரலில் பாட” என்ற பாடலை முதல்முறையாக பாடியிருந்தார். பாடல் பதிவாகி முடிந்ததும் அஜித்துக்கு அதனை போட்டுக் காட்டியுள்ளார் இயக்குநர் சரண். அந்த பாட்டு அவருக்கு ரொம்ப பிடித்து விடவே தொடர்ந்து ரீவைண்ட் செய்து கேட்டுக் கொண்டே இருந்துள்ளார். 


தினமும் இது தொடர்ந்த நிலையில், அந்த சமயத்தில் தான்  ஒரு காட்சியை ஊட்டியில் படமாக்கலாம் என சரணிடம் அஜித் சொல்லியுள்ளார். உடனடியாக இருவரும் காரில்  ஊட்டிக்கு சென்றுள்ளார்கள். அப்போது இருந்த சாலை வசதிக்கு ஊட்டிக்கு சாதாரணமாக  12 மணி நேரத்தில் தான் செல்ல முடியும். ஆனால் அஜித் 7 மணி நேரத்திலேயே சென்றுள்ளார். அஜித் கார் ரேஸர் என்பதால் அப்படி இருக்கலாம் என நீங்கள் நினைக்கலாம். 


அதுதான் இல்லை. கிட்டதட்ட காரில் சென்ற 7 மணி நேரமும்  ஷாலினி பாடிய “சொந்தக்குரலில் பாட” பாடல் நான் ஸ்டாப் ஆக திரும்ப திரும்ப ஒலித்துள்ளது. இப்போது உள்ள லூப் மோட் ஆப்ஷன் எல்லாம் அப்போது இல்லை என்பதால் அந்த பாடலை கேசட்டில் 10 முறை கேசட்டில் பதிவு செய்து சரண் கொடுத்துள்ளார். அதேபோல் படப்பிடிப்பிலும் ஷாலினிக்கு அடிபட்டப்போது அஜித் துடித்துப் போயுள்ளார். இது அனைத்தையும் இயக்குநர் சரண் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். 


2000 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துக் கொண்ட அஜித் - ஷாலினி தம்பதியினருக்கு 2008 ஆம் ஆண்டு தான் அனோஷ்கா என்ற மகளும்,  தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு ஆத்விக் என்ற மகனும் பிறந்தார்கள். கிட்டதட்ட 23 ஆம் ஆண்டு திருமண நாளை நெருங்கி கொண்டிருக்கும் இந்த காதல் ஜோடி  என்றைக்கும் தமிழ் சினிமாவின் ஸ்பெஷல் தான்..!