ஆங்கில புத்தாண்டான ஜனவரி 1 இன்று பிறந்துள்ளதை முன்னிட்டு, மக்கள் உற்சாகத்துடனும் கோலாகலமாகவும் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். புத்தாண்டு என்றாலே ஒவ்வொரு துறையினரும் மிகுந்த ஆவலுடன் புத்தாண்டை எதிர்கொள்வது வழக்கம்.

Continues below advertisement

புதுப்படங்களின் பர்ஸ்ட் லுக்:

அந்த வகையில், தமிழ் திரையுலகிற்கும் புத்தாண்டு என்பது ஒவ்வொரு ஆண்டும் மிகவும் முக்கியமானது ஆகும். பொங்கல் பண்டிகையில் வரும் தொடர் விடுமுறையை குறிவைத்து பல படங்களும் இறங்குவது கோலிவுட்டின் வழக்கம். இந்தாண்டு பல படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில், பல படங்களின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.

Continues below advertisement

டிமான்டி காலனி 3:

அருள்நிதி நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற டிமான்டி காலனி, டிமான்டி காலனி 2ம் படங்களின் தொடர்ச்சியாக இந்த படம் உருவாகியுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ட்ரெயின்:

மிஸ்கின் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் ஸ்ருதிஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி ஒரு செடியுடன் ரயிலில் நடந்து செல்வது போல இந்த போஸ்டர் உள்ளது.

ஸ்ப்ரிட்:

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்திற்கு பிறகு இவருக்கு இந்திய அளவில் ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இவரது நடிப்பில் ராஜா சாப் படம் வெளியாக உள்ள நிலையில், இவரது நடிப்பில் உருவாக உள்ள படம் ஸ்பிரிட். அர்ஜுன் ரெட்டி, அனிமல் படத்தை இயக்கிய சந்தீப் வங்கா ரெட்டி இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கும் இன்று வெளியாகியுள்ளது. 

மனிதன் தெய்வமாகலாம்:

பிரபல இயக்குனர் செல்வராகவன் தற்போது பரபரப்பான நடிகராக தமிழ் திரையுலகில் உலா வருகிறார். இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மனிதன் தெய்வமாகலாம். டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. சைக்கிளில் தனது ஜோடியை முன்பக்கம் அமரவைத்து செல்வராகவன் ஓட்டி வருவது போல இந்த பர்ஸ்ட் லுக் உள்ளது. கிராமப்புற பின்னணியில் இந்த படம் உருவாகிறது.

ரேஜ்:

அறிமுக நடிகரான ஷான், ஷிர்லி பபித்ரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ரேஜ். விபின் ஆர் இசையில் அறிமுக இயக்குனர் சிவனேசன் இயக்கியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியாகியுள்ளது. 

திரெளபதி 2:

திரெளபதி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிறது. இந்த படத்தின் புதிய லுக்கை இயக்குனர் மோகன் ஜி வெளியிட்டுள்ளார். முதல் பாகத்தின் கதாநாயகனான ரிச்சர்ட் இதிலும் கதாநாயகனாக நடித்துள்ளார். வரலாற்று காலத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.