ஜனநாயகன்
நடிகர் விஜய் தற்போது எச் வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே ,பாபி தியோல் , பிரியாமணி , மமிதா பைஜூ , கெளதம் மேனன் ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். கே.வி.என் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது.
கொடைக்கானலில் படப்பிடிப்பு
தற்போது ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பிற்காக விஜய் தனது சொகுசு விமானத்தில் மதுரை விமான நிலையம் வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் விஜயின் ரசிகர்கள் மற்றும் தவெக கட்சித் தொண்டர்கள் கூடி விஜயை வரவேற்றார்கள். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
ஜனநாயகன் படத்தில் அனுமன்கைண்ட்
ஜன நாயகன் படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கத்தி , மாஸ்டர் , லியோ , பீஸ்ட் ஆகிய படங்களைத் தொடர்ந்து அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அனிருத் விஜய் கூட்டணியில் வெளியான பாடல்கள் அனைத்துமே பெரியளவில் ஹிட் அடித்துள்ளன. இதனால் ரசிகர்களிடம் ஜனநாயகன் பட பாடல்களுக்கு பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் ஜன நாயகன் படத்தில் பிரபல ராப் பாடகர் அனுமன்கைண்ட் ராப் பாடல் ஒன்றை பாடியுள்ளதாக தெரிவித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த அனுமன் கைண்ட் கடந்த ஆண்டு பிக் டாக் என்கிற பாடல் மூலம் உலகளவில் பிரபலமானார். சமீபத்தில் இவரது மற்றொரு பாடல் வெளியாகி வைரல் ஹிட் அடித்தது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அனுமன்கைண்ட் விஜயின் ஜன நாயகன் படத்தில் அனிருத் இசையில் ராப் பாடல் ஒன்றை பாடியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு உற்சாகமளித்துள்ளது.