ஒரு டிக்கெட்டிற்கு 5 ரூபாய் வீதம் 55, 28,211 டிக்கெட்களுக்கான பணத்தை ராமர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது அனுமன் படக்குழு.
ராமர் கோயில் குடமுழுக்கு
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் குடமுழுக்கு நாளை ஜனவரி 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இந்திய வரலாற்றில் மிகப்பெரிய நிகழ்வாக இந்த நாள் கருதப்படுகிறது. இந்த கோயியில் ஐந்து வயது குழந்தை ராமர் சிலை கடந்த 18-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மைசூரைச் சேர்ந்த அருண் யோகிராஜ் இந்த சிலையை உருவாக்கியுள்ளார். இந்த கோயிலின் உருவாக்கத்திற்காக பல்வேறு பிரபலங்கள் பணமாகவும் பொருளாகவும் நன்கொடைகள் வழங்கியுள்ளார்கள். தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தன் சார்பில் 30 கோடிகளை நன்கொடையாக வழங்கியுள்ளார் என்று சமீபத்தில் தகவல் வெளியானது. தற்போது அனுமன் படக்குழுவினரும் ராமர் கோயிலின் மேம்பாட்டிற்காக பெரிய தொகை ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளது.
அனுமன்
இயக்குநர் பிரஷாந்த் வர்மா இயக்கத்தில் தெலுங்கு நடிகர் தேஜா சஜ்ஜா நடித்துள்ள படம் அனுமன். பிரஷாந்த் வர்மா சினிமேட்டிக் யுனிவர்ஸின் முதல் படமாக உருவாகி இருக்கும் அனுமன் படம் கடந்த ஜனவர் 12-ஆம் தேதி வெளியாகி யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளது. வினய் ராய், அம்ரிதா ஐயர், வரலஷ்மி சரத்குமார் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சமீபத்தில் இந்தப் படத்தின் இசைவெளியீடு ஹைதராபாதில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் சிரஞ்சீவி படக்குழு சார்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
. அனுமன் படத்தின் ஒவ்வொரு டிக்கெட் விற்பனையில் இருந்தும், 5 ரூபாயை அயோத்தியில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ராமர் கோயிலுக்கு நன்கொடை கொடுப்பதாக படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது அனுமன் படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதை தொடர்ந்து சொன்ன வார்த்தையை நிறைவேற்றியுள்ளது படக்குழு.
இதுவரை அனுமன் படத்திற்கு 55, 28,211 டிக்கெட்கள் விற்பனை ஆகியுள்ளன. ஒரு டிக்கெட்டிற்கு 5 ரூபாய் வீதம் 55, 28,211 டிக்கெட்களுக்கான பணத்தை ராமர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது அனுமன் படக்குழு. இந்த தகவலை எக்ஸ் தளத்திலும் வெளியிட்டுள்ளது.