”நீண்ட காலம் எதிர்பார்த்த நாள் வந்துவிட்டது. சூரரைப் போற்று படக்குழுவுக்கு மிகப்பெரிய நன்றி” என ஜி.வி.பிரகாஷ் நன்றி ட்வீட் செய்துள்ளார்.


68ஆவது தேசிய விருதுகள் இன்று வழங்கப்பட்ட நிலையில், சூரரைப் போற்று படத்துக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருது இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.


ஜி.வி.பிரகாஷ் முதன்முதலாக தேசிய விருது வென்ற நிலையில், அவருக்கு திரையுலகைச் சேர்ந்தவர்களும், பிரபலங்களும் நெட்டிசன்களும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், சூரரைப் போற்று படக்குழுவினர், தன் குடும்பத்தார் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஜி.வி.பிரகாஷ் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


அதில், “ஒரு நாள் நீ பெரிதாக  சாதிப்பாய்... ஒரு நாள் நீ வெற்றி பெறுவாய்... ஒரு நாள் நாம் நினைத்த வகையில் அனைத்தும் நடக்கும்... நீண்ட நாள் காத்திருப்புக்கு பின் நான் எதிர்பார்த்த இந்த நாள் வந்து விட்டது.


இந்த பிரபஞ்சத்துக்கு நன்றி. என் தந்தை வெங்கடேஷ், சைந்தவி, பாவனி, அன்வி உள்ளிட்ட  என் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி. சூரரைப் போற்று படக்குழுவுக்கு மிகப்பெரிய நன்றி. 


எனக்கு இசையமைக்க வாய்ப்பு கொடுத்த இயக்குனர் சுதா கொங்கரா, சூர்யா, 2டி மற்றும் ராஜசேகர் பாண்டியன் அனைவருக்கும் நன்றி.


எனது இசைக்கலைஞர்கள், எனது குழு, சவுண்ட் என்ஜினியர் உள்ளிட்ட  அனைவருக்கும் சிறப்பு நன்றி. இந்த நாள் என் வாழ்வின் முக்கிய நாள்” எனப் பகிர்ந்துள்ளார்.


 






தமிழ் சினிமாவில் தன் மழலைக் குரலால் பாடகராக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தன் இசைப் பயணத்தைத் தொடங்கிய ஜி.வி.பிரகாஷ் குமார், 2006ஆம் ஆண்டு வசந்தபாலனின் ’வெயில்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.


சுமார் 15 ஆண்டுகளாக திரைத்துறையில் இயங்கி வரும் ஜி.வி.பிரகாஷ், இசைக்கோர்வை தாண்டி, பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகக் கலைஞராக விளங்கி வருகிறார். தன் 35ஆவது வயதில் ஜி.வி. பிரகாஷ் தற்போது தன் முதல் தேசிய விருதை வென்றுள்ளார்.