நடிகர் சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கி சூடு நடைபெற்றதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட் திரையுலகில் நடித்து தனக்கென தனியிடம் பிடித்தவர் சல்மான் கான். இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். 1988 ஆம் ஆண்டு பிவி ஹோ தோ ஐசியில் என்ற படத்தின் மூலம் சினிமா வாழ்க்கையை தொடங்கிய சல்மான் கானுக்கு 1989 ஆம் ஆண்டு வெளியான மைனே பியார் கியா படம் திருப்புமுனையாக அமைந்தது. இப்படிப்பட்ட சல்மான் கானை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகளும் உண்டு. மான் வேட்டையாடிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளார். 2015ல் கவனக்குறைவாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தினார். இதில் ஒருவர் உயிரிழந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் பாலிவுட் முன்னணி நடிகராக உள்ள சல்மான் கானுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். கடந்தாண்டு இவர் நடிப்பில் பதான், கிசி கா பாய் கிசி கி ஜான். டைகர் 3 ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது.
இவரது வீடு பாந்த்ராவில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் அமைந்துள்ளது. இன்று அதிகாலை இவரது வீட்டு முன் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி 4 முறை சுட்டுள்ளனர். சத்தம் கேட்டு உடனடியாக வீட்டில் இருந்த காவலாளிகள் வெளியே வந்து பார்த்தபோது அந்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இதுதொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.