தமிழ் சினிமாவில் 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட படம் என்ற கின்னஸ் சாதனையை பெற்றுள்ள சுயம் வரம் படம் வெளியாகி இன்றோடு 24 ஆண்டுகள் ஆகியுள்ளது.


ஏகப்பட்ட நட்சத்திரங்கள் - இயக்குநர்கள் 


சுயம் வரம் படத்தில் நடிகர்களாக விஜயகுமார், சத்யராஜ், பிரபு, அப்பாஸ், நெப்போலியன், பார்த்திபன், பிரபுதேவா, பாண்டியராஜன், வினித், லிவிங்ஸ்டன், அர்ஜூன், கார்த்திக், பாக்யராஜ், மன்சூர் அலிகான், ஜனகராஜ், விக்னேஷ், செந்தில் என ஒட்டுமொத்த திரையுலகினரும் இணைந்திருந்தனர். இதேபோல் மஞ்சுளா, ரோஜா, கஸ்தூரி, மகேஸ்வரி, சுவலட்சுமி, குஷ்பு, ஐஸ்வர்யா, ஹீரா, ஊர்வசி, ப்ரீதா விஜயகுமார், ரம்பா என ஏகப்பட்ட ஹீரோயின்கள் நடித்திருந்தனர். 


இயக்குநர்களாக கேயார்,ஏ.ஆர்.ரமேஷ், இ.ராமதாஸ், சுந்தர்.சி., பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், லியாகத் அலிகான், அர்ஜூன், குரு தனபால், ஆர்.சுந்தரராஜன், சுபாஷ், செல்வா, சிராஜ் என ஒவ்வொரு கதையையும் ஒவ்வொருவர் படமாக்கினர். மேலும் தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், வித்யாசாகர், சிற்பி என நான்கு இசையமைப்பாளர்கள் பணியாற்றினர். அதேசமயம் ஒளிப்பதிவாளர் தொடங்கி உதவி நடன இயக்குநர்கள் வரை மொத்தம் 1,453 பேர் பணியாற்றி சாதனை படைத்தனர். 


படத்தின் கதை 


விஜயகுமாரின் 60வது பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் திரைப்படம்  தொடங்கும். விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியினருக்கு 3 மகன்கள்(சத்யராஜ், பிரபு, அப்பாஸ்), 6 மகள்கள் (ரோஜா, சுவலட்சுமி, மகேஸ்வரி, கஸ்தூரி, ப்ரீதா விஜயகுமார், ரம்பா). இவர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் ஆசைப்படுகின்றனர். அது நடந்ததா என்பதை கலகலப்பாகவும் சுவாரஸ்யமாகவும் படமாக்கியிருந்தனர். படத்திற்கு பக்கப்பலமாக பாடல்கள் அமைந்தது. 


மேலும் சில தகவல்கள் 


இந்த படத்தின்  தயாரிப்பாளர் கிரிதரிலால் நாக்பால், இப்படி ஒரு படம் எடுக்க வேண்டும் என்பதை தனது கனவாக கொண்டிருந்தார். 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி காலை 6  மணிக்கு, ஏ.வி.எம்  ஸ்டூடியோவில் படப்பூஜை நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய படப்பிடிப்பு  மறுநாள் காலை, 6.58 மணிக்கு முடிவடைந்தது. 11 பாகங்களாக கதை பிரிக்கப்பட்டு முதலில் ஷூட்டிங், கையோடு டப்பிங், ரீ- ரெக்கார்டிங் என அனைத்தும் நடைபெற்றது. 


முதலில் நடிப்பாக இருந்த விஜயகாந்த் , முரளி , பிரசாந்த் , பிரகாஷ்ராஜ், சிம்ரன் ,தேவயானி மற்றும் கீர்த்தி ரெட்டி ஆகிய முன்னணி பிரபலங்கள் படத்தில் இருந்து விலகினர். இதேபோல் முதலில் முடிவு செய்யப்பட்ட இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி , எஸ்.ஏ.சந்திரசேகர்  இறுதியில் இடம்பெறவில்லை. இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் தமிழ் சினிமாவின் பெருமை என்பதால் இன்றளவும் ரசிகர்களால் கவனிக்கத்தக்கப்படமாக அமைந்துள்ளது.,