அடுத்தவங்களை நம்பி எதுவுமே செய்யக்கூடாது என மிகவும் நொந்து போய் டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்தவர் மரக்கடை அதிபர் ஜி.பேச்சி முத்து. இவர் டிக்டாக் செயலி மூலம் காமெடி வீடியோக்களை பகிர்ந்து ஜிபி முத்துவாக பிரபலமானார். குறிப்பாக நெல்லை மாவட்ட வட்டார வழக்கை அழகான பேசி அனைவரையும் கவர்ந்தார். அவரின் பேமஸ் டயலாக் ஆன செத்தப்பயலே இளசுகளை வெகுவாக கவர்ந்தது.
சமூக வலைதளத்தில் ஜிபி முத்துவை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ்கள் போட்டு அவரை பிரபலமாக மாற்றினர். இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6ல் போட்டியாளர்களில் பங்கேற்றார். ஆனால் நிகழ்ச்சி ஒளிபரப்பாக தொடங்கிய ஒரு மாதத்திலேயே அவர் தன் மகனை காணாமல் இருக்க முடியவில்லை என வெளியேறினார். ஜி.பி.முத்துவின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் பாராட்டு கிடைத்தது. சர்ச்சையை கடந்து ஜிபி முத்துவின் உதவிகளும், அவரின் குடும்ப சூழலும் பலரையும் கண் கலங்க வைத்தது.
தொடர்ந்து ஓ மை கோஸ்ட், பாபா பிளாக்ஷீப் உள்ளிட்ட சில படங்களிலும் ஜி.பி.முத்து நடிக்க ஆரம்பித்தார். அதேசமயம் சின்னத்திரை, பெரிய திரை என மாறி மாறி பிஸியாக நடித்து வரும் அவர், வழக்கம்போல லெட்டர் படிப்பதையும் நிறுத்தவில்லை. அந்த வகையில் தற்போது ஜிபி முத்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.
நண்பர்களே, நான் அப்படியே குலசை கடற்கரைக்கு வந்தேன். ஏன்னு கேட்டீங்கன்னா, நிம்மதியே இல்ல. ரொம்ப மனசங்கடமா இருக்கு. அடுத்தவங்களை நம்பி எதுவுமே செய்யக்கூடாது. நமக்கு என்ன தோணுதோ அதைத்தான் செய்யணும். அடுத்தவங்க இருக்காங்க, அவங்க வைக்குறாங்கன்னு யார் சொல்றதையும் கேட்க கூடாது. சில விஷயங்கள் செய்வதால் நல்லவர்களுடைய மன கஷ்டத்துக்கு ஆளாகி விடுகிறோம். இன்னைக்கு ஒரு சின்ன விஷயம் நடந்துச்சு. அது என் மனதை மிகவும் பாதித்து விட்டது. அதை நானே பேசி முடித்து விட்டேன். யாருமே உங்களுக்கு என்ன தோணுதோ அதை மட்டுமே செய்யுங்க. அடுத்தவங்க இருக்காங்கன்னு நினைக்காதீங்க என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். ஜி.பி.முத்துவுக்கு உண்மையில் என்ன நடந்தது என தெரியவில்லை. ஆனால் நீங்கள் மனவருத்தப்பட வேண்டாம் என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.