கோலிவுட்டின் முன்னணி நடிகை நயன்தாரா நடித்த ’கோலமாவு கோகிலா’ படத்தின் இந்தி ரீ மேக்கான ’குட்லக் ஜெர்ரி’ (Good luck Jerry) படத்தின் ட்ரெய்லர் முன்னதாக வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
கோலமாவு கோகிலா ரீமேக்
தமிழில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், வடிவேல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்த படம் ’கோலமாவு கோகிலா’. இப்படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.
2018ஆம் ஆண்டு தமிழில் வெளியான இந்தப் படம் நயன்தாராவுக்கு மாஸ் ஹீரோக்களுக்கு இணையான வெற்றியை பெற்றுத் தந்தது. தொடர்ந்து இப்ப்படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி ஹாட்ஸ்டார் தளம் பெற்றது.
ஜெர்ரியாக ஜான்வி
இந்நிலையில் முன்னதாக இப்படத்தின் இந்தி ரீ மேக் உரிமையை இயக்குநர் கரண் ஜோஹர் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இப்பட வேலைகள் முன்னதாகத் தொடங்கப்பட்டு நயன்தாரா கதாபாத்திரத்தில் மறைந்த ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூரின் மகளான ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
தொடர்ந்து படப்பிடிப்பு சரசரவென நடைபெற்று முடிந்த நிலையில், முன்னதாக இப்படத்தினை வரும் ஜூலை 29ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ரிலீஸ் செய்வதாக படக்குழு அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ், கலர் எல்லோ புரொடக்ஷன்ஸ் மற்றும் மகாவீர் ஜெயின் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளன. இப்படத்தினை இயக்குனர் சித்தார்த் சென்குப்தா இயக்கியுள்ளார். ஜான்வி கபூருடன் தீபக் டொப்ரியல், மிட்டா வஷிஷ்ட், நீரஜ் சூட் உள்ளட்ட நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.