நடிகர் அஜித்தின் 'துணிவு' படத்திற்கு பிறகு மிகவும் ஆர்வமுடன் தல ரசிகர்கள் அடுத்த படத்தை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் 'விடாமுயற்சி' படம் அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் திரிஷா, ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் மற்றும் பல வெளிநாடுகளில் தீவிரமாக படமாக்கப்பட்டது. இறுதியாக ஐதராபாத்தில் படமாக பட்டு வந்த நிலையில் தீபாவளி ரிலீசாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அதில் ட்விஸ்ட் ஒன்று ஏற்பட்டுள்ளது. 



 


மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வந்த 'விடாமுயற்சி' படம் இடையில் நிறுத்தப்பட்ட நிலையில் அடுத்த படத்தில் கவனம் செலுத்த துவங்கினார் நடிகர் அஜித். 'மார்க் ஆண்டனி' படம் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பு மிகவும் மும்மரமாக நடைபெற்று வந்தது. இறுதி கட்டத்தை நெருங்கிவிட்ட இப்படத்தின் பணிகள் பொங்கலுக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருந்து வருவதால் அது குட் பேட் அக்லி படம் வெளியாவதையும் பாதித்து வருகிறது. 


தீபாவளி அல்லது கிறிஸ்மஸ்க்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அது பொங்கல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. எனவே பொங்கலுக்கு வெளியாக இருக்கும் கமலின் 'தக் லைஃப்' படத்துடன் நடிகர் அஜித்தின் 'விடாமுயற்சி' திரைப்படம் மோத உள்ளது. 


ஏற்கனவே பொங்கலை குறித்து வைத்திருந்த ஆதிக் ரவிச்சந்திரனின் 'குட் பேட் அக்லி' படம் இதனால் கோடை கொண்டாட்டமாக மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. 



 


தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்த்த தல ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சினாலும் 2025ம் ஆண்டு இரண்டு படங்கள் வெளியாக உள்ளன என்பது டபுள் உற்சாகத்தை கொடுத்துள்ளது. 


விஜயின் 'வாரிசு' மற்றும் அஜித்தின் 'துணிவு' படங்கள் ஒரே நேரத்தில் வெளியான பிறகு விஜயின் லியோ மற்றும் கோட் என இரு படங்கள் வெளியாகிவிட்டன. ஆனால் அஜித் படம் மட்டும் தள்ளிப்போவது அவரின் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது. இருப்பினும் அடுத்து இரு படங்கள் ஒரே ஆண்டில் வெளியாகப்போவதை நினைத்து மனதை தேற்றி கொண்டு வருகிறார்கள்.