2014-ஆம் ஆண்டு விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 'கோலி சோடா'. 'பசங்க' திரைப்படத்தின் மூலம் பிரபலமான நான்கு பசங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் கதாநாயகர்களாக நடித்திருந்தனர். அதில் நடிகை சீதா நடித்த மற்றுமொரு கதாபாத்திரமும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. சோடா புட்டி கண்ணாடியுடன் ஒல்லியான ஒரு தேகத்துடன் தோற்றத்தில் இருந்த நடிகை சீதா அப்படத்திற்கு பிறகு பெரிய அளவில் படங்களில் எதிலும் நடிக்கவில்லை என்றாலும் காலங்களை கடந்தும் இன்றும் அவரின் கதாபாத்திரம் பேசப்படுகிறது. 



இயக்குநரை திட்டிய சீதா :


சமீபத்தில் நடிகை சீதா நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற போது தான் சந்தித்த அவமானங்கள் குறித்தும் படத்தில் நடித்ததால் கிடைத்த அனுபவம் குறித்தும் பல தகவல்களை பகிர்ந்து இருந்தார். "நான் என்னுடைய பிரெண்ட் வீட்டிற்கு செல்லும் வழியில் ஒருவர் என்னிடம் வந்து உன்னுடைய பெயர் என்னமா? உன்னோட போன் நம்பர் தர்றியா இல்ல உன்னோட அப்பா நம்பர் தர்றியா என கேட்டவரை தாறுமாறாக ச்சீ உனக்கு வெட்கமா இல்ல... போன் நம்பர் கேக்குற, அதுவும் என்னோட அப்பா நம்பர் வேற கேக்குற” என கேவலமா திட்டியுள்ளார். ”அடுத்த நாள் தான் அவரின் அசிஸ்டன்ட் மூலம் தெரிய வந்தது அவர் தான் விஜய் மில்டன் சார் என தெரிந்தது. அடுத்த நாள் அவர் முகத்தை பார்க்கவே எனக்கு அசிங்கமாக இருந்தது" என்றார்


தோற்றத்தை கேலி செய்த சொந்தம் :


"என்னுடைய அம்மா தான் என்னை வற்புறுத்தி நடிக்க சொன்னாங்க. அப்பாவிற்கு உடம்பு சரியில்லை அதனால இன்னைக்கு வரைக்கும் எங்க அம்மாதான் வீட்டு வேலை செய்து எங்களுக்கு தேவையானது எல்லாம் செய்றாங்க. நான் வேலைக்கு போறேன் நீங்க வீட்டில் இருங்கள் என சொன்னால் கூட நான் இருக்குற வரைக்கும் நான் தான் உன்னை பார்த்துக்கொள்வேன் என்பாராம்.  அவங்களை நான் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். அது தான் என்னுடைய ஆசை. எனக்கு நடிப்பதில் முதலில் கொஞ்சம் கூட இன்ட்ரஸ்ட் இல்லை. எனக்கு சினிமாவில் நடிக்க பயம். யாராவது ஏதாவது பண்ணிவிடுவாங்களோ என பயம். ஆனால் உண்மையில் அப்படி எதுவுமே இல்லை. இதுவரையில் எனக்கு யாரும் எந்த ஒரு தொந்தரவும் தந்ததில்லை. என்னோட சொந்தம், நண்பர்களே  உன்னோட மூஞ்சியை போய் நடிக்க கூப்பிடுவாங்களா? என அசிங்கப்படுத்தினர். ஆனால் படம் வெளியான பிறகு அந்த பொண்ணு சினிமாவில் நடிக்குது ரொம்ப பந்தா காமிக்குதுன்னு சொன்னாங்க” என்றார்


 



படிப்பும் நடிப்பும் :


கோலி சோடா படத்தில் நடித்த அனைவரையும் பேட்டி எடுத்துள்ளார்கள். ஆனால் நீங்கள் மட்டும் இதுவரையில் எந்த ஒரு பேட்டியும் கொடுக்கவில்லையே ஏன் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் "என்னை யாரும் பேட்டி எடுக்க அழைக்கவில்லை. என்னோட மூஞ்சியெல்லாம் யாராவது பார்ப்பங்களா?” என்றார். சினிமாவில் நடித்தால் நன்றாக சம்பாதிக்கலாம் என்று தான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அப்படி எல்லாம் ஒன்றுமே இல்லை. ஒரு மாசத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் தான் ஷூட்டிங் இருக்கும். எத்தனை நாள் ஷூட்டிங் இருக்கோ அதற்கு மட்டுமே சம்பளம் கொடுப்பார்கள். படித்து கொண்டே ஷூட்டிங் செல்வதும் சிரமமாகத்தான் இருக்கிறது என்றாலும் கஷ்டங்களை அனுபவித்தால் தானே சாதிக்க முடியும் என அனைத்தையும் எனது அம்மாவிற்காக பொறுத்து கொண்டு போகிறேன். 


கோலி சோடா 1.5 :


தற்போது இயக்குனர் விஜய் மில்டன் கோலி சோடா 1.5 படத்தை இயக்கி வருகிறார். அப்படத்தில் கோலி சோடா படத்தில் நடித்த பெரும்பாலானோர் நடிக்கிறார்கள். ”முதலில் ஷூட்டிங் போக வேண்டுமா என கடுப்பாக இருக்கும் ஆனால் இப்போதெல்லாம் ஷூட்டிங் போக போகிறோம் என்றாலே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இப்படம் நன்றாக போய் கொண்டு இருக்கிறது” என்றுள்ளார். சீதாவின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. சினிமா திறமையானவர்களுக்கு முன்னேற்ற பாதையை காட்டும் என்பதற்கு சீதா ஒரு உதாரணம்.