பிருத்விராஜ் புரொடக்ஷன்ஸ் & மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுப்ரியா மேனன் மற்றும் லிஸ்டன்ஸ் ஸ்டீபன் தயாரிப்பில், ராஜேஷ் முருகேசன் இசையில், பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், நடிகர் பிரித்விராஜ், நடிகை நயன்தாரா நடிப்பில் சில தினங்களுக்கு முன்னர் வெளியான திரைப்படம் 'கோல்ட்'. 


நெகடிவ் விமர்சனங்களை குவித்த கோல்ட் :


பிரேமம் படத்தின் அமோகமான வெற்றிக்கு பிறகு ஏழு ஆண்டு இடைவேளைக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான 'கோல்ட்' திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. ஓணம் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இப்படத்தின் ரிலீஸ் சில பணிகள் முடிவடையாத காரணத்தால் டிசம்பர் 1ம் தேதி வெளியானது. படத்தின் திரைக்கதையின் மீது இருந்த நம்பிக்கையால் பெரிய அளவில் விளம்பர பணிகள் மேற்கொள்ளாமல் வெளியிடப்பட்ட இப்படம் முதல் நாள் முதலே எதிர்மறையான விமர்சனங்களை குவித்தது. வேற லெவேலில் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது ஒரு ஏமாற்றமாகவே இருந்தது. 



 


அல்போன்ஸ் புத்திரன் போஸ்ட் :


கோல்ட் திரைப்படத்திற்கு கிடைத்த நெகடிவ் விமர்சனங்களுக்கு பதிலடியாக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ஃபேஸ்புக் மூலம் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். "கோல்ட் திரைப்பதை பற்றின நெகடிவ் விமர்சனங்களை நான் பார்த்தேன். அதை எழுதிய அனைவருக்கும் என்னுடைய சிறப்பான நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 



 


ஈகோ மட்டுமே வெளிப்படுகிறது :


தேநீர் நன்றாக இல்லை என்றால் அது குறித்து தெளிவுபடுத்தும் உரிமை அனைவருக்கும் உள்ளது. அதன் மூலம் அந்த தேநீரை தயாரித்தவர் அடுத்த முறை அந்த தவறு நடக்காமல் திருத்திக்கொள்ளலாம். அதை விடுத்து படு மோசமான தேநீர் என முத்திரை குத்துவதன் மூலம் அவர்களின் ஈகோ மட்டுமே வெளிப்படுகிறது. இதனால் இரண்டு தரப்பினருக்கும் எவ்வித பயனும் இல்லை. 


ஏன் இப்படத்திற்கு கோல்ட் தலைப்பானது ?


இப்படத்திற்கு நான் பிரேமம் 2 அல்லது நேரம் 2 என தலைப்பிடவில்லை. ஆனால் இதற்கு கோல்ட் என தலைப்பிட்டுள்ளேன். நானோ அல்லது என்னுடைய படக்குழுவினர்களோ உங்களிடம் இருந்து வெறுப்பை சம்பாதிக்கவோ அல்லது உங்களின் நேரத்தை வீணடிக்கவோ விரும்பவில்லை. அதனால் எங்கள் கோல்ட் படத்தின் படக்குழுவை நீங்கள் சந்தேகப்பட தேவையில்லை" என நெகடிவ் விமர்சனங்களை கொடுத்தவர்களுக்கு பதிலடியை பதிவிட்டு இருந்தார். அவரின் இந்த பதிவு சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.  



யார் அந்த திரை விமர்சகர்கள்:


மேலும் அல்போன்ஸ் புத்திரன் மற்றுமொரு போஸ்டில் மிகவும் பிரபலமான திரைப்பட விமர்சகர்களான மணீஷ் நாராயணன், பரத்வாஜ் ரங்கன் மற்றும் ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்டோரின் 'கோல்ட்' படத்தின் விமர்சனம் பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என ஒரு குறிப்பையும் பகிர்ந்துள்ளார்.