GOAT Box Office Collection: விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம், நேற்று ஒரே நாளில் மட்டும் இந்தியாவில் ரூ.30 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.


அமோக வரவேற்பு பெற்ற ”தி கோட்”


விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்ட பொருட் செலவில் உருவான திரைப்படம் தி கோட். பெரும் எதிர்பார்ப்புகளுடன் கடந்த வியாழனன் அன்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் வசூலையும் வாரிக் குவித்து வருகிறது. டிக்கெட் முன்பதிவிலேயே பெரும் சாதனை படைத்த இப்படம், முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 126 கோடி ரூபாய் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாகஅறிவித்துள்ளது. அதைதொடர்ந்து, இரண்டாவது நாளில் இரண்டாவ்து நாளில் இந்தியாவில் மட்டும் சுமார் 25 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்தியாவில் ரூ.100 கோடியை கடந்த இந்தியா:


தி கோட் படத்திற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் அடிப்படையில், மூன்றாவது நாள் வசூல் நிலவரத்தை Sacnilk வெளியிட்டுள்ளது. அதன்படி, விடுமுறை அல்லாத நாள் என்பதால், வெள்ளிக்கிழமை குறைந்த தி கோட் படத்தின் வசூல், விடுமுறை நாளான நேற்று மீண்டும் அதிகரித்துள்ளது. அதாவது, நேற்று உள்நாட்டில் சுமார் 33 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. அதில், தமிழ்நாட்டில் ரூ.29.1 கோடி, தெலுங்கு வெர்ஷனில் ரூ.1.75 கோடி மற்றும் வடமாநிலங்களில் ரூ.2.15 கோடி வசூலும் அடங்கும்.  இதன் மூலம் வெளியான மூன்றாவது நாளிலேயே தி கோட் திரைப்படம், இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.100 கோடியை கடந்து வசூலித்துள்ளது.


முதல் நாள் வசூல் - சுமார் ரூ.44 கோடி


2வது நாள் வசூல் - சுமார் ரூ.25.5 கோடி


3வது நாள் வசூல் - சுமார் ரூ.33 கோடி


மொத்தம் - ரூ.102.5 கோடி (தமிழ் - ரூ.91 கோடி, தெலுங்கு - ரூ.6.1 கோடி, இந்தி - ரூ.5.4 கோடி)


பி மற்றும் சி செண்டர் திரையரங்குளில் டிக்கெட்கள் இன்னும் நேரடியாகவே விற்கப்படுவதால், Sacnilk குறிப்பிடுவதை காட்டிலும் படத்தின் வசூல் சற்று அதிகமாகவே இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.


ரூ.200 கோடியை கடந்த தி கோட்:


வார இறுதியை தொடர்ந்து தி கோட் திரைப்படத்தின் வசூல் நேற்று முதல் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இதனால், தமிழ்நாட்டில் பல திரையரங்குகளிலும் ஹவுஸ்-ஃபுல் காட்சிகளாக ஓடுவதாக திரையரங்க உரிமையாளர்களே தெரிவித்து வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி 30-க்கும் அதிகமான வெளிநாடுகளிலும் தி கோட் திரைப்படம் வெளியாகியுள்ளது. அங்கும் இப்படத்திற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக வெளியான மூன்றே நாட்களில் ஒட்டுமொத்தமாக இப்படம், சுமார் 215 கோடி ரூபாயை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், தி கோட் படத்தின் வசூல் நேற்றைவிட இன்று சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


முழு நேர அரசியலுக்கு முன்பாக விஜய் நடிக்கும் இரண்டாவது கடைசி திரைப்படம், டி-ஏஜிங் தொழில்நுட்பம், விஜயின் இரட்டை வேட நடிப்பு, பிரமாண்ட தயாரிப்பு, விஜயகாந்தில் ஏஐ சிறப்பு தோற்றம் மற்றும் எதிர்பாராத கேமியோக்கள் என பல்வேறு அம்சங்கள் இப்படத்தை காண தூண்டுகின்றன.