GOAT Box Office Day 1 Prediction: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கோட் திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுடன் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
பெரும் எதிர்பார்ப்பில் ”தி கோட்”
விஜய்யின் ' தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரைக்கு வந்துள்ளது. இது உள்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச பாக்ஸ் ஆபிஸிலும், பிரமாண்ட டிக்கெட் முன்பதிவை பெற்றுள்ளது. இதன் மூலம், ஏற்கனவே தமிழ் சினிமாவுக்கான முன்பதிவில் புதிய பென்ச் மார்க்கை நிறுவியுள்ளதோடு, இதுவரை இல்லாத புதிய வசூல் சாதனையை நோக்கி தி கோட் திரைப்படம் பயணித்துக் கொண்டுள்ளது.
அண்டை மாநிலங்களில் அதிகாலையிலேயே படம் வெளியானாலும், தமிழ்நாட்டில் காலை 9 மணியளவில் தான் படம் வெளியானது. சமூக வலைதளங்களில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் பகிரப்படுகின்றன. இருப்பினும், இது படத்தின் முதல் நாள் வணிகத்தை பாதிக்கப் போவதில்லை. 'GOAT' தனது முன்பதிவு வணிகத்தின் மூலம் உலகளவில் சுமார் ரூ.62 கோடியை பதிவு செய்துள்ளது. இதில் ரூ.30 கோடி (கிராஸ்) (பிளாக் செய்யப்பட்ட இருக்கைகள் உட்பட) இந்தியாவில் இருந்து மட்டுமே என வர்த்தக இணையதளமான Sacnilk தெரிவித்துள்ளது .
முதல் நாள் வசூலே ரூ.100 கோடி?
தி கோட் திரைப்படம் உலகளவில் மொத்தமாக ரூ.100 கோடிக்கு மேல் (கிராஸ்) வசூல் செய்து, உள்நாட்டு சந்தையில் மட்டும் ரூ.30 முதல் 40 கோடி வரை வசூல் செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. 'GOAT' இந்தியாவில் முதல் நாளே 12.37 லட்சம் டிக்கெட்டுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்து விற்பனை செய்துள்ளது. உலகளவில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் ஓபனிங்கில் சாதனை படைத்த, விஜயின் இரண்டாவது படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, 'லியோ' அதன் முதல் நாளில் உலகம் முழுவதும் சுமார் 142 கோடி ரூபாய் வசூலித்தது. இது தமிழ் திரையுலகில் உச்சநட்சத்திரமாக விஜய்க்கு உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ஒரு புதிய அளவுகோலை அமைத்து கொடுத்தது. இந்தியாவில் முதல் வார இறுதிக்குள் இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக முதல் இரண்டு நாட்கள் ரசிகர்கள் மூலம் திரையரங்குகள் நிரம்ப வாய்ப்புள்ளது. அடுத்த இரண்டு நாட்கள் பொது விடுமுறை என்பதால், குடும்பம் குடும்பமாக திரையரங்கிற்கு படையெடுக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் அடுத்த நான்கு நாட்களுக்கு, தி கோட் படத்தின் வசூல் தடையின்றி வேகமெடுக்கும் என கருதப்படுகிறது.
உச்சத்தில் எதிர்பார்ப்புகள்:
லியோ பட அளவிற்கு தி கோட் படத்திற்கு விளம்பரங்கள் மேற்கொள்ளப்படாவிட்டாலும், இதன் மீதான எதிர்பார்ப்பு குறைந்தபாடில்லை. படத்தின் டிரெய்லரே கதைக்களம் ஆக்ஷன் பேக் நிறைந்ததாக இருக்கும் என உறுதிபடுத்தியது. விஜய்க்கான டி-ஏஜிங் டெக்னாலஜி மற்றும் மிகவும் அறிமுகமான நட்சத்திர நடிகர்கள் இருந்ததும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியது. அதற்கும் மேலாக, விஜய் முழு நேர அரசியலில் களமிறங்குவதற்கு முன்பாக நடித்துள்ள, இரண்டாவது கடைசி படம் என்பதால் அவரை திரையில் காண திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். மறைந்த நடிகர் விஜயகாந்த், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம், படத்தில் இடம்பெற்று இருப்பதும் படத்தை காண வேண்டும் என்ற ஆர்வத்தை ஊக்குவித்துள்ளது. தமிழ் சந்தையில் அதன் செயல்திறன் அபாரமாக இருக்கும் அதே வேளையில், முன்பதிவுகளில் காணப்படும் ட்ரெண்டின் படி தெலுங்கு வியாபாரம் இன்னும் அபாரமாக இருக்கக் கூடும்.
படத்தில் உள்ள நட்சத்திரங்கள்:
மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், லைலா, சினேகா, அஜ்மல், பிரேம்ஜி மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'GOAT', பாக்ஸ் ஆபிஸில் தளபதி விஜய்க்கான வரலாற்றை மாற்றி எழுதும் நோக்கத்தில் உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை, ஏஜிஎஸ் நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரித்துள்ளது.