சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகை காயத்ரி யுவராஜ். கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே நடிகையாக வேண்டும் என்ற கனவோடு பல ஆடிஷன்களில் கலந்து கொண்ட போதும் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தாலும் தனது விடா முயற்சியை கை விடாமல்  தொடர்ந்து முயற்சி செய்து வந்தார். அந்த சமயத்தில் தான் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மானாட மயிலாட' டான்ஸ் நிகழ்ச்சி கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் தனது நடன திறமையை நிரூபித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார் காயத்ரி. அதன் மூலம் பல சீரியல் வாய்ப்புகள் குவியத் தொடங்கின. 


 



சின்னத்திரையில் பிஸி : 


சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடர் மூலம் அறிமுகமான காயத்ரி அதை தொடர்ந்து சரவணன் மீனாட்சி, அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர், பொன்னூஞ்சல், மெல்ல திறந்தது கதவு உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிஸியான ஒரு நடிகையாக மாறினார். வசீகரமான முகம், அழகான சிரிப்பு, யதார்த்தமான நடிப்பு என ஒரு திறமையான நடிகையாக வலம் வந்தார் நடிகை காயத்ரி யுவராஜ்.  


மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கூட இருவரும் ஜோடிகளாக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர். பல ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று தனது திறமையை நிரூபித்துள்ள காயத்ரி சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவரின் ரீல்ஸ் வீடியோகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  


 



திருமண வாழ்க்கை :


டான்ஸ் மாஸ்டர் யுவராஜை காதலித்து திருமணம் செய்து கொண்ட காயத்ரி தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவலை சில மாதங்களுக்கு முன்னர் அவரின் கணவர் யுவராஜ் தெரிவித்து இருந்தார். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே 12 வயதில் மகன் ஒருவர் இருக்கிறார். 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காயத்ரி கருவுற்று இருப்பதால் அவருக்கு ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். காயத்ரியின் வளைகாப்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில்  சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். காயத்ரியின் வளைகாப்பு புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு லைக்ஸ்களை அள்ளி குவித்து வருகிறது. 


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'மீனாட்சி பொண்ணுங்க' சீரியலில் நடித்து வந்த காயத்ரி பிரசவ காலம் நெருங்கிவிட்டதால் சீரியலில் இருந்து விலகினார். அந்த சீரியல் குழுவினரின் இந்த வளைகாப்பு விழாவில் கலந்து கொண்டனர்.