குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் தோன்றி நடிகையாக ,பாடலாசிரியராக, டப்பிங் கலைஞராக இயக்குனராக தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் பயணித்து வெற்றிக் கண்டவர் நடிகை ரோகிணி. ஆந்திராவில் பிறந்த சென்னையில் வளர்ந்த இவர் சினிமாவில் மட்டுமின்றி தொலைக்காட்சி, அரசியல் களத்திலும் காலூன்றியவர். தந்தையின் கனவை நனவாக்க குழந்தை நட்சத்திரமாக தனது 5ம் வயதில் சினிமாவில் நுழைந்தவர் பின்னர் 'சுமை' திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழ் சினிமாவின் தரமான வில்லன் என இன்றும் கருதப்படும் நடிகர் ரகுவரனை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். 




பன்முக வித்தகியாக ஒரு பீனிக்ஸ் பறவை போல காலூன்றிய இடம் எல்லாம் வெற்றியை தக்கவைத்து வருகிறார். ஒரு டப்பிங் கலைஞராக ஐஸ்வர்யா ராய், தபு, மனிஷா கொய்ராலா, ஜோதிகா என பல நடிகைகளுக்கும் பின்னணி குரல் கொடுத்துள்ளார். இருவர், ராவணன் படத்தில் ஐஸ்வர்யா ராய், 'பாம்பே' படத்தில் மனிஷா கொய்ராலா, வேட்டையாடு விளையாடு படத்தில் ஜோதிக்காக என பல நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். ரேவதி, ஊர்வசி, ரோகிணி நடித்த மகளிர் மட்டும் திரைப்படத்தில் பாப்பம்மா கதாபாத்திரத்தில் நடிகை ரோகிணியின் நடிப்பு அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விடமுடியாது. இப்படி பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் வெகு சிறப்பாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ரோகிணி.


பாடலாசிரியர் ஆன கதை :


ரோகிணி ஒரு சிறந்த எழுத்தாளர் மட்டுமின்றி சிறந்த பாடலாசிரியர் என்பதை வெளி கொண்டு வந்ததில் முக்கிய பங்கு வகிப்பவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் நடிகை ஜோதிகாவிற்காக டப்பிங் பேசியது நடிகை ரோகினி. அந்த சமயத்தில் நடிகை ரேவதி இயக்கும் ஒரு படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக நச்சுனு நான்கு வரிகள் தேவைப்பட்டது. அதற்காக டப்பிங் பேசுவதை நிறுத்திவிட்டு அந்த நான்கு வரிகளை சிறப்பாக எழுதி கொடுத்துள்ளார் ரோகிணி. இதை பார்த்த கௌதம் மேனன் நீங்க ரொம்ப நல்ல எழுதுறீங்களே எனக்காக ஒரு பாடலுக்கு வரிகள் எழுதி கொடுக்க முடியுமா என கேட்டதால் நமக்கு கிடைத்த ஒரு இனிமையான பாடல்தான் பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் 'பாம்பே ஜெயஸ்ரீ', 'மது ஸ்ரீ' குரலில் வெளிவந்த 'உனக்குள் நானே' பாடல். இந்த பாடல் மூலம் அவர் பாடலாசிரியர் என்ற அடையாளத்தை பெற்றார். இந்த பாடலின் சிறப்பு என்னவென்றால் வேறு ஒரு கணவன், வேறு ஒரு மனைவி, வேறு ஒரு காதல் ஆனால் ஒரு வார்த்தை கூட அதில் கொச்சையாக இருக்காது. அந்த அளவிற்கு மிகவும் கண்ணியமாக அந்த வரிகளை எழுதி இருப்பார். இந்த பாடலின் முதல் நான்கு வரிகள் ரோகினிக்கு மிகவும் பிடித்த வரிகள். 






பன்முக கலைஞர் :


பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகை, தொகுப்பாளராக மட்டுமின்றி இயக்குநராக அவர் இயக்கிய 'அப்பாவின் மீசை' திரைப்படம் சில காரணங்களால் வெளிவராமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தையும் தாண்டி ரோகிணி ஒரு சிறந்த சமூக சேவகியும், கம்யூனிஸ்ட்டும் கூட. இந்த முற்போக்கு எழுத்தாளரை நமக்கு அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இருவருக்கும் தான் நன்றிகள் போய் சேரவேண்டும்.