விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி 2திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பான வரவேற்பைப் பெற்று உலகளவில் ரூ.46 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றிப்படமாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக 12 நாட்களில் சுமார் ரூ.46.22 கோடி வசூலை எட்டியுள்ள இந்த படம், விஷ்ணு விஷாலின் திரையுலகப் பயணத்தில் மிகப்பெரிய கமர்சியல் வெற்றிகளில் ஒன்றாக மாறியுள்ளது.
கட்டா குஸ்தி வெற்றிவிழாவில் பாரபட்சம்
கட்டா குஸ்தி 2 படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக வெற்றிவிழா ஒருங்கிணைக்கப்பட்டது. வெற்றி விழாவில் விஷ்ணு விஷாலுக்கு ரூ.60 லட்சம் மதிப்புள்ள BMW கார் பரிசளிக்கப்பட்ட நிலையில், இயக்குநருக்கு தங்கச் சங்கிலி மற்றும் காப்பு வழங்கப்பட்டது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் சேர்த்து ஐஸ்வர்யா லக்ஷ்மிக்கும் 40 கிராம் வெள்ளிக்காசு மட்டுமே வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்குப் பிறகு ரசிகர்கள் மத்தியில் வேறு ஒரு விவாதம் உருவாகியுள்ளது. கட்டா குஸ்தி முதல் பாகமாக இருந்தாலும், தற்போது வெளியாகியுள்ள இரண்டாம் பாகமாக இருந்தாலும், கதையின் மையப்புள்ளியாக இருப்பது ஐஸ்வர்யா லக்ஷ்மி ஏற்றுள்ள மல்யுத்த வீராங்கனை கதாபாத்திரம்தான். அந்த கதாபாத்திரம் வலுவாக அமைந்ததால்தான் இந்த திரைப்பட வரிசைக்கு தனித்துவமான அடையாளம் கிடைத்தது
இதனால், "படத்தின் வெற்றிக்கு ஹீரோ மட்டுமல்ல, ஹீரோயினின் அர்ப்பணிப்பும் முக்கிய காரணம். குறிப்பாக கதையே அவரை மையமாகக் கொண்டிருக்கும்போது, அவருக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைத்திருக்க வேண்டாமா?" என்ற கேள்வியை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.
ஐஸ்வர்யா லக்ஷ்மியின் அர்ப்பணிப்பு
ராட்சசன் படத்திற்குப் பிறகு விஷ்ணு விஷாலின் கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக முதல் கட்டா குஸ்தி அமைந்தது. அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக ஐஸ்வர்யா லக்ஷ்மியின் அர்ப்பணிப்பான நடிப்பு பார்க்கப்பட்டது. அந்த கதாபாத்திரத்திற்காக அவர் உடல் எடையை கணிசமாக அதிகரித்ததோடு, படப்பிடிப்பு முடிந்த பிறகு மீண்டும் பழைய உடல் அமைப்புக்கு திரும்ப மிகுந்த சிரமப்பட்டதாக பல பேட்டிகளில் கூறியிருந்தார்.
அதுமட்டுமல்லாமல், கட்டா குஸ்தி 2உருவானபோது மீண்டும் அதே அளவுக்கு உடல் எடையை அதிகரிக்க முடியாது என்று ஆரம்பத்தில் படக்குழுவிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறியிருந்தார். இருப்பினும் கதாபாத்திரத்தின் மீது இருந்த நம்பிக்கையால் மீண்டும் அந்த சவாலை ஏற்று நடித்தார். இப்படிப்பட்ட உடல் மற்றும் மன உழைப்பை கொடுத்த நடிகையாக இருந்தும், வெற்றி விழாவில் அவருக்கு தனிப்பட்ட அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பதே தற்போது ரசிகர்களின் ஆதங்கமாக மாறியுள்ளது.
