நடிகை சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘ கார்கி’ திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “ அனைவருக்கும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி, பல சினிமா விமர்சகர்களால் பாராட்டப்பட்ட சாய் பல்லவியின் ‘கார்கி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரபல நடிகை சாய்பல்லவி நடிப்பில் இயக்குநர் கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் கடந்த ஜூலை 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கார்கி. சூர்யா ஜோதிகாவின் 2டி எண்டர்டெய்ண்ட் பேனரில் கீழ் வெளியான இந்தப்படம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.கோவிந்த் வசந்தா இசைமைத்திருந்த இந்தப்படம் சாய் பல்லவியின் சினிமா கேரியரில் புதிய மைல்கல்லாக அமைந்திருக்கிறது. திரையரங்குகளில் 3 ஆவது வாரத்தை கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில், வருகிற ஆகஸ்ட் 12 ஆம் தேதி இந்தப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சாய் பல்லவி : “பிரேமம்” (மலையாளம்), “ஃபிடா” (தெலுங்கு) மற்றும் நெட்ஃபிக்ஸ் ஆன்தாலஜி “பாவ கதைகள்” (தமிழ்) ஆகியவற்றால் இந்திய சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தார். நடன கலைஞராக இருந்து பின்னர் நடிகையாக மாறியவர் நடிகை சாய் பல்லவி. பிரேமம் திரைப்படம் சாய் பல்லவிக்கு மிகப்பெரிய பிரேக்காக இருந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து களி, தமிழில் தியா, மாரி 2, என்.ஜி.கே உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்தினார். அண்மையில் இவர் மற்றும் ராணா இணைந்து நடித்து வெளியான விராட பர்வம் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.