வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக மிகவும் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்' திரைப்படம். தி கோட் மற்றும் தளபதி 69 படங்களுடன் சினிமாவில் இருந்து ரிட்டைர்மென்ட் எடுத்துக்கொண்டு முழு கவனத்தையும் அரசியலில் செலுத்த போவதாக நடிகர் விஜய் தெரிவித்ததால் வழக்கமாக அவரின் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை காட்டிலும் இப்படங்களுக்கு கூடுதல் ஆர்வம் காட்டி வருகிறார்கள் திரை ரசிகர்கள். அந்த வகையில் வரும் செப்டம்பர் 5ம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது 'தி கோட்' திரைப்படம். 


 




பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, அஜ்மல், ராகவா லாரன்ஸ், யோகி பாபு, பிரேம்ஜி அமரன், சுதீப், லைலா, விடிவி கணேஷ், ஜெயராம், லைலா, வைபவ் என மிக பெரிய திரை நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் சைன்ஸ் பிக்ஷன் ஜானரில் டைம் ட்ராவலை மையமாக வைத்து உருவாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் ஏற்கனவே இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. 


 


'தி கோட்' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விசில் போடு மற்றும் சின்ன சின்ன கண்கள் பாடல்களை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் மூன்றாவது சிங்கிள் பாடலான 'ஸ்பார்க்' பாடல் வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா மற்றும் வ்ருஷா பாலு இணைந்து பாடியுள்ள இந்த பாடலின் வரிகளை வெங்கட் பிரபுவின் தந்தையும், தமிழ் சினிமாவின் பன்முக கலைஞருமான கங்கை அமரன் எழுதியுள்ளார். ஏராளமான வெற்றிப்பாடல்களின் வரிகளை எழுதியுள்ள கங்கை அமரன் இந்த காலகட்டத்துக்கு ஏற்ற வகையில் இந்த பாடலின் வரிகளை எழுதியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தை கொடுத்தது. 


 




ஸ்பார்க் பாடலின் வரிகளை எழுதியது குறித்து கங்கை அமரன் கூறுகையில் "ஆயிரம் கணக்கான பாடல்களின் வரிகளை நான் எழுதி இருந்தாலும் விஜய்காக நான் எழுதி முதல் பாடல் இது தான். அதனாலேயே இந்த பாடல் மிகவும் ஸ்பெஷல். அவரும் என்னுடைய மகன் போல தான். அதனால் அவருக்காக இந்த பாடலின் வரிகளை எழுதியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. 


பல மாதங்களுக்கு முன்னரே இந்த பாடலின் வரிகளை எழுதியதால் அதை நான் மறந்தே விட்டேன். அந்த சமயத்தில் எனக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தேன். இருப்பினும் யுவன் பாடலின் டியூனை எனக்கு அனுப்பிய பத்தே நிமிடங்களில் நான் இந்த பாடலின் வரிகளை எழுதி அனுப்பிவிட்டேன். பாடல் ரெக்கார்டிங் செய்த பிறகு அதை கேட்டு விஜய் பாராட்டினார்" என்றும் தெரிவித்து இருந்தார் கங்கை அமரன்.