வாரிசு:
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. வாரிசு படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ரசிகர்களின் பல நாட்கள் எதிர்பார்ப்பாக பார்க்கப்பட்டுவரும் படம் வாரிசு. ராஷ்மிகா மந்தனா, நடிகர் பிரபு, குஷ்பு உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளாதால் அந்த எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் வரும் பொங்களுக்கு இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அது மட்டுமன்றி அஜித் நடித்துள்ள வலிமை படமும் பொங்கலையொட்டி வெளியாகும் என தகவல் வெளியானது. இதனால், வாரிசு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களுக்கு எக்கச்சக்கமாக உள்ளது. இந்நிலையில் டிசம்பர் 24ல் வாரிசு ஆடியோ ரிலீஸ் என்று உறுதிப்படுத்தியுள்ளார் கணேஷ் வெங்கட்ராமன். மேலும் ஆடியோ லாஞ்ச்க்கு பிறகே ட்ரைலர் வெளியீடு இருக்கும் என்ற தகவலையும் பகிர்ந்துள்ளார்.
எளிமையானவர் விஜய்:
நடிகர் விஜய்யுடன் தனது சூட்டிங் ஸ்பாட் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். இது குறித்து அவர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "விஜய் அண்ணா ரொம்பவே எளிமையானவர். எல்லோருமே விஜய் அண்ணா அதிகம் பேசமாட்டார். ரொம்ப ரிசர்வ்ட் என்றெல்லாம் சொல்லி இருந்தனர். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் நான் கண்ட விஜய் அற்புதமான மனிதர். நான் ஏற்கெனவே விஜய் ரசிகர் தான்.
ஆனால், ஒரு நல்ல மனிதராக அவரை அறிந்த பின்னர் அவருடைய மிகப்பெரிய ஃபேன் ஆகிவிட்டேன். என் மகள் விஜய் சாரின் தீவிர ரசிகை. அவளுக்கு 3 வயதாகிறது. அவள் பெயர் சமைரா. அவளைப் பற்றி நான் விஜய் அண்ணாவிடம் சொன்னேன். ஒரு நாள் வீடியோ காலில் பேசினார். அப்புறம் என் மகளை சூட்டிங் ஸ்பாட்டிற்கு அழைத்து வரச் சொன்னார். நானும் ஈவிபியில் படப்பிடிப்பு நடக்கும் போது அழைத்துச் சென்றேன். அவ்வளவு பரபரப்பான சூழலிலும் அவர் என் மகளுடன் 10 நிமிடங்கள் விளையாடினார். அவளை ரைம்ஸ் பாடச் சொல்லி கேட்டார். என் மகளுக்கு அத்தனை மகிழ்ச்சி ஏற்பட்டது.
போன் பார்க்க மாட்டார்:
அப்புறம் இன்னொரு விஷயமும் சொல்லணும். சூட்டிங் ஸ்பாட்டில் விஜய் அண்ணா ஃபோன் பார்த்து நான் பார்த்ததே இல்லை. ஒருநாள் நான் அவரிடம் கேட்டேன் அண்ணா நீங்கள் ஃபோன் பார்க்கவே மாட்டீர்களா என்று. அதற்கு அவர், காலையில் சூட்டிங் ஆரம்பித்த பின்னர் ஃபோன் பார்க்கவே மாட்டேன். அதற்கு முன்னர் பார்ப்பேன். ஈவினிங் 5 மணிக்கு கால்ஸ் அட்டண்ட் பண்ணுவேன். அவ்வளவு தான் ஃபோன் யூஸ் பண்ணுவேன் என்றார். அவரிடமிருந்து அந்த நல்ல விஷயத்தைக் கற்றுக் கொண்ட நான் அதனை பின்பற்ற முயற்சிக்கிறேன்.
அப்புறம் அவருடைய சாப்பாடும் ரொம்ப எளிமையானது. கொஞ்சமாகவே சாப்பிடுகிறார். சாதம், பருப்பு, காய்கறி கூட்டு என சாப்பிடுகிறார். எப்போதாவது நூடுல்ஸ் சாப்பிடுகிறார். மொத்தத்தில் விஜய் சாருடன் நடித்ததில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. அது எனது வாழ்நாள் அனுபவம் என்றே சொல்வேன்" என்று கணேஷ் வெங்கட்ராமன் கூறியுள்ளார்.