குட்நைட் படத்தில் நாயகி குறட்டை விடுவதுபோல் நாயகி குறட்டை விடுவதை மையமாக வைத்து டியர் படம் உருவாகியுள்ளது


டியர்


ஜி.வி பிரகாஷ் நடித்துள்ள கள்வன் படம் இன்று திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. இப்படியான நிலையில் ஜி.வி  நடித்து இதே ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் மற்றொரு படம் டியர். ஐஷ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கி வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி மற்றும் ஜி ப்ருத்விராஜ் உள்ளிட்டவர்கள் இணைந்து தயாரித்துள்ள படம் டியர்.


இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். காளி வெங்கட், இளவரசு, ரோகிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், மற்றும் நந்தினி உள்ளிட்டவர்கள் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.


டியர் டிரைலர்


கணவன் மனைவிக்கு இடையில் குறட்டை பிரச்சனை எவ்வளவு தீவிரமான பிரச்சனையாக இருக்கிறது என்பதை குறட்டையை வைத்து வெளியாகும் படங்களை வைத்து நாம் தெரிந்துகொள்ளலாம் .


கடந்த ஆண்டும் மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட் படம் ஒரு குறட்டையால் ஒரு குடும்பத்தில் எந்த மாதிரியான பிரச்சனைகள் வரும் என்பதை காட்டியது. அதுவும் ஒரு சமூகத்தில் ஒரு ஆண் குறட்டை விடுவதும் அதே சமூகத்தில் ஒரு பெண் குறட்டை விடுவதற்கு நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.


ஆண் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் காட்டிலும் இந்த விஷயத்தில் பெண் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் நாம் கற்பனை செய்து பார்க்கலாம்.






அப்படியான ஒரு பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் தான் டியர். இஞ்சினியரிங் படித்து செய்தி வாசிப்பாளராக இருக்கும் நாயகன் ஜி.வி பிரகாஷ் அவரது குடும்பம். மறுபக்கம் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ். லைட்டாக சத்தம் கேட்டாலே தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ளும் நாயகன், சிங்க கர்ஜனைபோல் குறட்டை விடுபவர் நாயகி.. இந்த இருவருக்கும் திருமணம் நடந்து முதலிரவில் தொடங்குகிறது இந்த குறட்டை பிரச்சனை.


இதனால் ஏற்படும் தூக்கமின்மை, மன அழுத்தம் அதனால் வெடிக்கும் பிரச்சனைகள் என காமெடியும் எமோஷனும் கலந்து படமாக டியர் படம் இருக்கும் என்பதற்கு இந்த டிரைலர் சான்று. 


இப்படியான ஒரு பிரச்சனைக்கு தீர்வு சொல்வது என்பது மிக சிக்கலானது. ஆனால் குட் நைட் படத்தில் மிக கவித்துவமான ஒரு தீர்வை சமாளிப்பாக இல்லாமல் எதார்த்தமாக சொல்லியிருந்தார்கள். இந்த முறை இந்த பிரச்சனைக்கு டியர் படக்குழு என்ன மாதிரியான தீர்வை சொல்லப் போகிறது என்பதை ஏப்ரல் 10-ஆம் தேதி வரை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்