மே மாதத்தைப் பொறுத்தவரை ஒரு சில முக்கியமான படங்கள் திரையரங்கில் வெளியாகின கவின் நடித்த ஸ்டார் , சந்தானம் நடித்த இங்க நான் தான் கிங்கு , சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதில் சுந்தர் சியின் அரண்மனை 4 படம் 100 கோடி வசூல் செய்து 2024 ஆம் ஆண்டில் முதல் 100 கோடி எடுத்த படமாக சாதனைப் படைத்துள்ளது.


சமீபத்தில் வெளியான ஹிப்ஹாப் தமிழாவின் பி.டி சார் மற்றும் ராமராஜனின் சாமானியன் ஆகிய இரு படங்களும் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளன. அடுத்தபடியாக மே மாதத்தின் கடைசி நாள் மே 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் படங்களைப் பார்க்கலாம்.


கருடன் 



சூரி, சசிகுமார் , உன்னி முகுந்தன்  உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ள படம் கருடன் . வெற்றிமாறன் கதை எழுத எதிர்நீச்சல் , காக்கிச் சட்டை , பட்டாஸ் ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விடுதலைப் படத்தில் நாயகனாக அறிமுகமான சூரி அடுத்தடுத்து பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வியக்க வைக்கிறார். அந்த வகையில் கருடன் படம் அவரது நடிப்பு பயணத்தில் மிக முக்கியமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். வரும் மே 31 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.


ஹிட்லிஸ்ட்



கே.எஸ்.ரவிகுமார் தயாரிப்பில் இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாக இருக்கும் படம் ஹிட்லிஸ்ட் . அறிமுக இயக்குநர்கள் சூர்யகதிர் காக்கள்ளர் மற்றும் கே கார்த்திகேயன் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளார்கள். சரத்குமார் , கெளதம் மேனன், சமுத்திரகனி , ஐஸ்வர்யா தத்தா , அபி நக்‌ஷத்ரா  ஆகியவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சி சத்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் மே 31 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. 


சோட்டா பீம்



அனிமேஷன் படமாக வெளியான சோட்டா பீம் அண்ட் தி கர்ஸ் ஆஃப் தம்யான்  (Chhota Bheem and the Curse of Damyaan)  படம் தற்போது நிஜ மனிதர்கள் நடித்துள்ள லைவ் ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது . ராஜீவ் சிலாகா இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் சோட்டா பீமாக  யாக்யா பாசின் என்பவர் நடித்துள்ளார். மூத்த பாலிவுட் நடிகர் அனுபம் கெர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


கடந்த மார்ச் மாதம் இப்படத்தில் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. லைவ் ஆக்‌ஷன் படம் என்பதால் இந்தப் படத்தின் கிராஃபிக்ஸ் மற்றும் வி.எஃப்.எக்ஸ் காட்சிகளை உருவாக்குவதற்கு மிகுந்த சிரத்தை எடுத்துள்ளது படக்குழு, கோடை விடுமுறையின் கடைசி நாளில் குழந்தை பார்த்து ரசிக்கும் வகையில் இப்படம் மே 31 ஆம் தேதி வெளியாகிறது. 


அகாலி



 நாசர் , தலைவாசல் விஜய் , ஜெயகுமார் ஜானகிராமன் , வினோத் கிஷன் ஸ்வயம் சித்தா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள திரில்லர் படம் அகாலி , முகமது ஆசிஃப் ஹமீது இப்படத்தை இயக்கியுள்ளார். வரும் மே 31 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.