ஷாருக் நடித்துள்ள சமீபத்தில் வெளியான ஜவான் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து சென்ற மாதம் வெளியான ஜெயிலர் வரை, இந்த ஆண்டில் பல படங்கள் ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் வசூலில் குறிப்பிடத்தகுந்த பங்காற்றி இருக்கின்றன. இந்நிலையில், இந்த ஆண்டு தொடக்கம் முதல் தற்போதைய செப்டெம்பர் மாதம் வரை பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரத்தைப் பார்க்கலாம்.


தென் இந்திய சினிமாக்களின் ஆதிக்கம்


ஆர்மேக்ஸ் மீடியா வெளியிட்டுள்ள தகவலின்படி கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில் இந்திய பாக்ஸ் ஆபீஸ் வசூலில் தென் இந்திய சினிமாக்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது.


இந்தத் தகவலின் படி 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் மொத்த இந்திய பாக்ஸ் ஆபீஸ் வசூலில் இந்தி சினிமாவின் பங்கு வெறும் 37 சதவீதம் எனவும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென் இந்திய மொழி திரைப்படங்கள் 51 சதவீதம் வசூலை ஈட்டியுள்ளதாகவும், ஹாலிவுட் திரைப்படங்கள் 12 சதவீதம் வசூல் ஈட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


5 ஆண்டுகளுக்கு முன் இந்த நிலவரம் அப்படியே தலைகீழாக இருந்தது. இந்தி சினிமாக்கள் மட்டுமே 60 சதவீதம் வசூலை ஈட்டியிருந்தது. இதற்கு முக்கியக் காரணம் என்று சொல்லப்படுவது கொரோனா! இந்திய சினிமா என்றால் இந்திய சினிமா என்கிற நிலவரம் தற்போது மாறி இந்தி சினிமாவிற்கு நிகராக தென் இந்திய மொழித் திரைப்படங்கள் அனைத்து மொழி ரசிகர்களிடமும் கொரோனா காலத்தில் செல்வாக்கைப் பெற்றன.


குறிப்பாக ஓடிடி தளங்களின் வருகைக்குப் பின் தரமான படைப்புகளை மக்கள் அங்கீகரித்து அதே அளவுக்கான தரத்தை திரையரங்குகளில் வெளியாகும் படங்களிலும் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளார்கள். அதே நேரத்தில் டப்பிங் செய்யப்பட்ட  கே.ஜி.எஃப், ஆர்.ஆர்.ஆர், புஷ்பா உள்ளிட்ட படங்கள் இந்தி ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.


ரெக்கார்டு பிரேக்கர் என்று அழைக்கப்படும் அமீர் கான் நடித்த லால் சிங் சட்டா படத்தின் தோல்வி பாலிவுட் சினிமாவுக்கு ஒரு பெரிய அடியாக அமைந்தது.


பாலிவுட்டை காப்பாற்றிய ஷாருக்கான்


இப்படியான நிலையில் ஷாருக் கான் நடித்து வெளியாகிய பதான் திரைப்படம் 1000 கோடிகளை வசூல் செய்து இந்தி சினிமா மீது மக்களுக்கு இருந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. மேலும் சமீபத்தில் வெளியான கட்டார் திரைப்படம் வெறும் ரூ.60 கோடிகள் செலவில் எடுக்கப்பட்டு, ரூ.600 கோடிவரை வசூலை ஈட்டியது. மேலும் அக்‌ஷய் குமார் நடித்த ‘ஓ.எம்.ஜி 2’ ரூ.50 கோடி செலவில் எடுக்கப்பட்டு ரூ. 220 கோடி வசூல் செய்தது. தற்போது அட்லீ இயக்கியிருக்கும் ஜவான் திரைப்படம் ரூ.800 கோடிகள் வசூல் ஈட்டியுள்ளது.


தமிழ் சினிமா வசூல்


தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ரூ.600 கோடி வசூல் செய்தது. வரும் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கும் ‘லியோ’ திரைப்படம் இந்த வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மலையாள சினிமாவில் டொவினோ தாமஸ் நடித்த ‘2018’ திரைப்படம் மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்டு ரூ.180 கோடிகள் வசூல் செய்தது.


ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டின் பாக்ஸ் ஆபீஸ் கடந்த ஆண்டைக் காட்டிலும் 15 சதவீதம் குறைந்துள்ளதாக ஆர்மேக்ஸ் மீடியா தெரிவித்துள்ளது . இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை இந்திய சினிமா ரூ.4,868 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இனி வரக்கூடிய படங்களின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தாலும் கடந்த ஆண்டின் மொத்த வசூலான ரூ.10,637 கோடி வசூலை நெருங்குவது சவாலானதாகவே இருக்கும்.