தேசம் என்றால் என்ன என்று தெரிவதற்கு முன்பே 90ஸ் கிட்ஸ்கள் ஒரு சில படங்களைப் பார்த்து சிலிர்த்துக் கொண்டு சில்லரையை விட்டெறிந்திருக்கிறோம். ஒவ்வொரு சுதந்திர தினத்தின் போதும் தொலைக்காட்சியில் அர்ஜூன் படங்களைப் பார்த்தது எல்லாம் ஒரு காலம். அப்படி 90ச் கிட்ஸ்கள் மத்தியில் பிரபலமாக இருந்த தேசப்பற்றைப் பற்றிய படங்களைப் பார்க்கலாம்


லகான்




இன்று இந்தியாவில் ஹாக்கியைக் காட்டிலும் கிரிக்கெட் விளையாட்டு அதிக ரசிகர்களைக் கொண்டிருக்கிறது. கிரிக்கெட் மீது இந்தியர்களுக்கு இருக்கும் ஈர்ப்பு லகான் படத்திற்கு பிறகு பலமடங்கு அதிகரித்தது என்று சொல்லலாம். ஆங்கிலேயர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையில் நடக்கும் கிரிக்கெட் போட்டி வழியாக தேசப்பற்றை  விதைத்த படங்களில் ஒன்று லகான். ஆமீர் கான் நடிப்பு பயணத்தில் குறிப்பிடத் தக்க மாற்றத்தை ஏற்படுத்திய படமாக அமைந்தது. இப்படத்தை மொழி கடந்து சென்று சேர்த்தவர் ஏ ஆர் ரஹ்மான்.


அதே போல் ஷாருக் கான் நடித்த சக் தே இந்தியா படமும் விளையாட்டின் வழியாக தேசப்பற்றை பேசிய படங்களில் குறிப்பிடத் தக்கது. லகான் படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவானது என்றால் ஹாக்கியை வைத்து வந்த படங்களில் இன்றுவரை சிறந்த படமாக இப்படம் இருக்கிறது.


ரங் தே பசந்தி




லகான் படம் வெளியாகி அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆமீர் கான் நடித்த ரங் தே பசந்தி படம் வெளியானது. முந்தைய படம் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டம் என்றால் இந்த படம் சுதந்திரத்திற்கு பின். கல்லூரியில்  நவநாகரீகமாக வாழ்ந்துகொண்டிருக்கும் இளைஞர்கள் தங்கள் நாடு சுதந்திரம் பெற்ற கதையை தெரிந்துகொள்கிறார்கள். காமெடி , ரொமான்ஸ் போன்ற எமோஷன்கள் இருந்தபடியால் இப்படத்தை இளைஞர்களால் அதிகம் தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது.


ஜெய்ஹிந்த்






தமிழைப் பொறுத்தவரை 90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் தேசப்பற்றை ஊற்றி ஊற்றி வளர்த்தவர் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் தான். ஆகஸ்ட் 15 என்றாலே சுதந்திர கோடியை ஸ்கூலில் ஏற்றிவிட்டு கொடுத்த மிட்டாயை வீட்டிற்கு திரும்பும் வழியில் மென்றுகொண்டே வந்து டிவியில் ஜெய் ஹிந்த் படம் பார்ப்பது தான் 90ஸ் கிட்ஸ்களின் வழக்கம். கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு பாடல் தவிர எல்லா காட்சிகளை பார்க்கவும் வீட்டில் அனுமதி இருந்தது. அவ்வப்போது சேதுபதி ஐ.பி.எஸ் , ரோஜா பார்த்தால் தேசிய கொடி சட்டையில் கொஞ்ச நேரம் கசங்காமல் இருக்கும்


இந்தியன் 




கம்பேக் இந்தியன் என்று கத்தி கத்தி கூப்பிடாமலேயே ஒரு இந்தியன் தாத்தா இருந்தார். நேர்மையான விடுதலை போராட்ட வீரரான சேனாபதி ஊழலை ஒழிக்க சட்டத்தை தன் கையில் எடுக்கிறார். தனது சொந்த மகன் என்றும் பார்க்காமல் அவனுக்கு தண்டனை கொடுக்கிறார். அது எல்லாம் கூட சரிதான். ஆனால் குழந்தைகளை மிரட்டி சோறூட்டும் அளவிற்கு இந்தியன் தாத்தா ட்ரெண்டாவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.


இன்றைய சூழலில் தேசப்பற்றைப் பற்றி மாதம் ஒரு படம் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அதைப் பற்றி நாம் பேசிக்கொண்டே இருக்கலாம். ஆனால் எல்லா காலத்திற்கும் கிளாசிக் என்று சொல்லும் வகையில் ஒரு படம் இருக்கிறது. 


23 ஆம் புலிகேசி




எந்த ஒரு விஷயம் என்றாலும் அதன் மீது அதீதமான பற்று என்பது வன்முறைக்கே இட்டுச்செல்லும். நம் தேசத்தின் மீது , நம் மதத்தின் மீது , நமக்கு இருக்கும் அதே பற்றுதான் இன்னொரு மதத்தினருக்கும் தன் தேசத்தின் மீதும் இருக்கும் இல்லையா. அதனால் அவ்வப்போது நம் தேசப்பற்றை அவ்வப்போது கொஞ்சம் பகடி செய்துகொள்வது நல்லது. இந்த பகடியின் வழியாக நம் விமர்சனத்தையும் பதிவு செய்யலாம்.  அந்த விமர்சனத்தை  யாரையும் புண்படுத்தாத வகையில் செய்துகாட்டிய படம் 23 ஆம் புலிகேசி. 


ஆங்கிலேயர்களுக்கு விஸ்வாஸியாக இருந்துகொண்டு தன் சொந்த மக்களை ஏமாற்றும் அரசன், அக்காமாலா , கப்ஸி போன்ற குளிர்பானங்களை நிறுவனங்கள் அமைக்க வைப்பது , நாகப்பதினியாருக்கும் நாகபதினியாருக்கும் இடையிலான சாதி மோதலை வியாபாரம் ஆக்குவது , இந்த தலையை அந்த உடலோடு சேர்த்து வரலாற்றை மாற்றி அமைப்பது, தூது வந்த புறாவை வறுத்து சாப்பிடுவது என வலிக்காமல் நிறைய ஊசிகளை குத்தும் படம்.