யுவர்பேக்கர்ஸ் ஃபவுண்டேஷன் சார்பில்யுவர்பேக்கர்ஸ் பிளேஎன்ற இலாப நோக்கற்ற ஓடிடி தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொழுதுபோக்குடன் சமூக சேவையையும் இணைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தளத்தில் திரைப்படங்களை இலவசமாக பார்க்க முடியும். விருப்பம் உள்ளவர்கள்இம்பாக்ட் டிக்கெட்என்ற வசதி மூலம் தங்களால் முடிந்த தொகையை நன்கொடையாக வழங்கலாம். இதில் கிடைக்கும் தொகையில் பெரும்பகுதி சமூக சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் என்றும், ஒரு பகுதி திரைப்படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

யுவர்பேக்கர்ஸ் ஃபவுண்டேஷன் நிறுவனர் கிஷோர் ஆதித்யா கூறுகையில், தங்களது அமைப்பு கடந்த ஆறு ஆண்டுகளாக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். புதுச்சேரியில் கடலுக்குள் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு கின்னஸ் சாதனை படைத்ததாகவும், பெண்கள் மேம்பாட்டிற்காகவும் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திரைத்துறையில் விஜய் சேதுபதி நடித்தமாமனிதன்உள்ளிட்ட திரைப்படங்களை விநியோகம் செய்ததாகவும், தொடர்ந்து சில படங்களை தயாரித்துள்ளதாகவும் கிஷோர் ஆதித்யா தெரிவித்தார். தற்போது பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும் சூழலில், சிறிய படங்களையும் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Continues below advertisement

மேலும், இரவு நேரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் ‘SOS’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திரைப்படங்களை உருவாக்கும் திட்டம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். திரைப்படங்களை நேரடியாக வாங்கியும், பகிர்வு முறையிலும் பெற்று வெளியிட உள்ளதாகவும் கூறினார்.

நிகழ்வில் பேசிய FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி, தமிழ் சினிமாவில் வெளியாகாமல் முடங்கியுள்ள ஏராளமான திரைப்படங்களில் தரமான படங்களை தேர்வு செய்து வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த முயற்சியின் லாபத்தில் 20 சதவீதம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என கிஷோர் ஆதித்யா உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நடிகர்கள் எஸ்.வி.சேகர், போஸ் வெங்கட், மைம் கோபி, யூகி சேது, கூல் சுரேஷ் உள்ளிட்டோரும் நிகழ்வில் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். உள்ளடக்கத்தின் தரம், இளைஞர்களின் புதிய முயற்சிகளுக்கு வாய்ப்பு, ரசிகர்களின் ரசனை ஆகியவை குறித்து அவர்கள் பேசினர். தொடர்ந்து, ஆதரவற்ற மற்றும் நலிவடைந்த பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் யுவர்பேக்கர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள், திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சிறிய படைப்புகளுக்கு மாற்று வாய்ப்பை உருவாக்குவதுடன், சமூகப் பணிகளுக்கும் ஆதரவளிக்கும் வகையில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.