மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் திரைப்படம் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. தென் தமிழகத்தைச் சேர்ந்த மணத்தி கணேசன் என்கிற முன்னாள் கபடி வீரரின் வாழ்க்கையைத் தழுவி பைசன் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்காக நடிகர் துருவ் விக்ரம் இரண்டு ஆண்டுகள் மணத்தி கணேசனிடம் கபடி பயிற்சி எடுத்துக்கொண்டார். துருவ் விக்ரமுக்கு பயிற்சி அளித்த அனுபவம் பற்றி மணத்தி கணேசன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார். 

Continues below advertisement

என் புள்ள மாதிரி பாத்துகிட்டேன்

துருவ் விக்ரம் குறித்து பேசுகையில் " துருவ் விக்ரம் ஒரு கபடி வீரராக ஆகாமல் இந்த படத்தை எடுத்து முடிக்க முடியாது என மாரி செல்வராஜ் சொல்லி என்னிடம் இரண்டு ஆண்டுகள் பயிற்சி கொடுக்க விட்டுவிட்டார். துருவை நான் ஒரு நடிகராக பார்க்கவில்லை என் மகனைப் போல் தான் பார்த்தேன். அதற்காக அவரை ரொம்பவும் கஷ்டப்படுத்தவும் முடியாது. ஆனால் முழு கிரவுண்டை பத்து சுற்று ஓட சொன்னாலும் துருவ் ஓடிவிடுவார். ஆரம்பத்தில் அவருக்கு கபடி விளையாடுவதற்கு ஏற்ற கால் தசை இல்லை. ஆனால் இரவு பகலாக கடினமாக உழைத்தார். தனது வீட்டின் மாடியில் தனியாக பயிற்சி எடுத்துக் கொண்டார். அவரது வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்று உபசரித்தார். இந்த படத்தில் கபடி காட்சிகள் எல்லாமே தத்ரூபமாக எடுக்கப்பட்டவை. இயக்குநர் மாரி செல்வராஜூக்கு ஒரு காட்சியில் திருப்தி வரவில்லை என்றால் அவர் அதற்காக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்வார். மதியம் 6 மணிக்கு தொடங்கினால் அடுத்த நாள் காலை 6 மணி வரை படப்பிடிப்பு தொடரும் " என மணத்தி கணேசன் கூறியுள்ளார். 

பைசன் பற்றி மாரி செல்வராஜ்

பைசன் படம் பற்றி படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் கூறுகையில் " பைசன் மணத்தி கணேசனின் கதை மட்டுமில்லை. தென் தமிழகத்தில் பல இளைஞர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் புனைவும் தான். இப்படத்தில் நிஜமான 70 கபடி வீரர்கள் நடித்துள்ளார்கள் என் ஒட்டுமொத்த வாழ்க்கையில் ஆகப்பெரும் நம்பிக்கையாக இந்த பைசன் காளமாடன் கதையைப் பார்க்கிறேன்" என்று கூறினார்.

Continues below advertisement

பைசன் படத்தில் ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் , பசுபதி , அழகம்பெருமாள் , ஹரி கிருஷ்னன் ஆகியோர் நடித்துள்ளார்கள். நிவாஸ் கே பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார். பா ரஞ்சித்தின் நீலம் ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.