தமிழ் சினிமாவை விட்டு விலகி இருக்கும் பிரபல நடிகை பூஜாவிடம் மீண்டும் நடிக்கச் சொல்லி ரசிகர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பதிவிடும் கமெண்டுகள் வைரலாகி வருகிறது. 

Continues below advertisement

தேசிய விருது பெற்ற நடிகை

தமிழ் சினிமாவில் ஜே ஜே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா உமாசங்கர். இவர் மறைந்த இயக்குநர் ஜீவா இயக்கிய உள்ளம் கேட்குமே படத்தில் தான் நடிக்க வந்தார். ஆனால் அந்த படம் வெளியாக தாமதமாக ஜே ஜே படம் முதலில் ரிலீசானது. தொடர்ந்து அஜித்துடன் அட்டகாசம் படத்தில் இணைந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார். இதற்கிடையில் உள்ளம் கேட்குமே படம் அவரின் 3ம் படமாக வெளியானது. 

இந்த படத்தை தொடர்ந்து பூஜா தமிழில் மட்டும் ஜித்தன், பட்டியல், தம்பி, தகப்பன் சாமி, ஓரம் போ, நான் கடவுள், துரோகி, விடியும் முன், கடவுள் பாதி மிருகம் பாதி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இதில் பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். அந்த படத்துக்கு தேசிய விருது கிடைத்தது.  அதேபோல் சிறந்த நடிகையாக மாநில திரைப்பட விருது, பிலிம்பேர் விருது, விஜய் அவார்ட்ஸ் என பல பெருமைகளை பூஜா பெற்றார்.

Continues below advertisement

தமிழில் அவர் 2015ம் ஆண்டுக்குப் பின் வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் இலங்கை சென்ற பூஜா தற்போது தொடர்ச்சியாக சிங்கள படங்களில் நடித்து வருகிறார். 

கம்பேக் கொடுக்க கோரிக்கை

இந்த நிலையில் பூஜா தொடர்ந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த 2022ம் ஆண்டு கூட ரசிகர் ஒருவர் எக்ஸ் வலைத்தளத்தில், “கம்பேக் கொடுங்க அக்கா” என தெரிவித்தார். அதற்கு பூஜா, “அய்யோ. எனக்கு இப்போது மிகவும் வயதாகிவிட்டது. 44 நடக்கிறது. கம்பேக் கொடுத்தால் சித்தி கேரக்டர் தான் பண்ணனும் என நகைச்சுவையாக பதிலளித்தார். 

ஆனால் அதனை சீரியஸாக எடுத்துக் கொண்ட ரசிகர் ஒருவர், “ஹாய் அக்கா.. நீங்க அடுத்த படம் தமிழில் எப்ப நடிப்பீங்க.. சித்தி கேரக்டர் பண்ணினாலும் பரவாயில்லை. சூப்பரா இருப்பீங்க. சீக்கிரமா ஒரு படம் நடிங்க” என தெரிவித்துள்ளார். இதற்கு பூஜா தரப்பில் எந்தவித பதிலும் இல்லை.  தமிழ் சினிமாவில் இருந்து யாராவது நடிக்க கேட்டு அவரை அணுகினால் நிச்சயம் ரசிகர்களின் கோரிக்கையை அவர் நிறைவேற்றுவார் என்பது நிதர்சனமான உண்மையாகும்.