நடிகர் சோனு சூட்டின் உருவப்படத்தை ரசிகர்கள் அரிசியைக் கொண்டு உருவாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


1999 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடித்த கள்ளழகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் சோனுசூட். தொடர்ந்து  நெஞ்சினிலே, சந்தித்த வேளை, மஜ்னு, ராஜா, கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி, மத கஜ ராஜா, சாகஸம், தேவி உள்ளிட்ட பல படங்களில் இவர் வில்லனாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல்  இந்தி , தெலுங்கு , தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். சோனு சூட் தற்போது ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் ஃபதே படத்தில் இணைந்து நடித்து வருகிறார்.


இதனிடையே கொரோனா காலத்தில் வெளிமாநிலங்களில் சிக்கிக் கொண்ட புலம் பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்புவதில் சோனுசூட் எடுத்த முயற்சி அவரை மக்கள் மத்தியில் ஹீரோவாக மாற்றியது. அதிலிருந்து சோனு சூட் எதை செய்தாலும் அது மக்கள் மத்தியில் வைரலாக மாறி வருகிறது.  உதவி கேட்டு வருபவர்களுக்கு  தனது தொண்டு நிறுவனம் மூலம் ஏராளமான உதவிகளை அவர் செய்து வருகிறார். மேலும் மும்பைக்கு  சினிமா ஆசையில் வருபவர்களுக்கு உதவுவதற்கு தனி மையம் ஒன்றையும் சோனுசூட் நடத்தி வருகிறார். 






அதேபோல் பொதுமக்களில் யார் உதவி வேண்டி சமூக வலைத்தளங்கள் மூலம் கோரிக்கை வைத்தாலும் சோனு சூட் தொடர்ந்து அவர்களுக்கு உதவுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதற்கிடையில் கடந்த பிப்ரவரி மாதம் பிரபல தெலுங்கு நடிகர் பரமேஷ்வர் ஹிவ்ராலே வீடியோ ஒன்றை சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் சாலையில் பொதுமக்கள் கோரிக்கைகளுடன் நிற்க அவர்களை சோனு சூட்  சந்தித்து உரையாடும் காட்சிகள் இடம் பெற்றது. 


இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ மத்தியப் பிரதேசத்தின் தேவாஸில் உள்ள துகோஜி ராவ் பவார் மைதானத்தில் எடுக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட 1 ஏக்கர் நிலத்தில் சுமார் 2500 கிலோ அரிசியைப் பயன்படுத்தி ரசிகர்களும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து சோனு சூட்டின் பிரமாண்டமான உருவப்படத்தை உருவாக்கியுள்ளனர். 


இந்த வீடியோவை “எல்லையற்ற அன்பு” என பகிர்ந்துள்ள சோனுசூட், அனைத்து அரிசியும் நன்கொடையாக வழங்கப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.