தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவமாக நடிகர் விஜயும் அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகும் சூழல் உருவாகியுள்ளது. விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு 'A' சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில் படம் ஜூலை 23 அல்லது ஜூலை 31 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒரு நாளில் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ஜூலை 31 வெளியீட்டை நோக்கி தயாரிப்பு நிறுவனம் நகர்ந்து வருவதாக திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Continues below advertisement

அதே நாளில் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் சிக்மா திரைப்படமும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தந்தை - மகன் திரைப்படங்கள் ஒரே நாளில் திரையரங்குகளில் நேருக்கு நேர் மோதும் அபூர்வமான சூழல் உருவாகியுள்ளது. சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள், "ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே" என்ற விஜயின் பிரபல வசனத்தை பகிர்ந்து இந்த மோதலை கொண்டாடி வருகின்றனர்.

ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Continues below advertisement

மறுபுறம், விஜயின் அரசியல் பயணத்திற்கு முன் வெளியாகும் கடைசி திரைப்படம் என்ற அடையாளத்தால் ஜனநாயகன் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு உருவாகியுள்ளது. படத்தின் சில காட்சிகள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் கசிந்தபோதும், அதனால் படத்தின் மீதான ஆர்வம் குறையவில்லை என்பதே திரையரங்கு உரிமையாளர்களின் கருத்தாக உள்ளது. மாறாக, ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியை திரையரங்குகளில் பார்த்தே ரசிக்க விரும்புவதால் முன்பதிவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் வெளிநாடுகளிலும் பிரம்மாண்டமாக படம் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் சுமார் 4,500 முதல் 5,000 திரைகளில் ஜனநாயகன் வெளியாகும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் நாளிலேயே ஜனநாயகன் நூறு கோடி வசூலை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆச்சரியப்படும் விதமாக ஜனநாயகன் திரைப்படத்தால் சிக்மா திரைப்படத்தின் வசூலில் பெரியளவில் பாதிப்பு ஏற்படாது என்றும் மாறாக விஜய் ரசிகர்கள் சிக்மா திரைப்படத்திற்கும் சமமான வரவேற்பை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது