நடிகர் தனுஷ் சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் பகிர்ந்த 'குட்டி கதை' தற்போது சமூக வலைதளங்களில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் தனது மகனுடன் வீடியோ கேம் விளையாடியதாகக் கூறிய அனுபவம், உலகப் புகழ்பெற்ற ஊக்கப் பேச்சாளர் Les Brown தனது மகனைப் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பு பேசிய உரையுடன் மிகவும் ஒத்துப்போவதாக இணையவாசிகள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
கடந்த வாரம் தனது ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த ரத்ததான முகாமில் கலந்து கொண்டு தனுஷ் உரையாற்றினார். அப்போது ரசிகர்கள் தொடர்ந்து நலத்திட்டப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும், சமூகத்துக்குப் பயனுள்ள செயல்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அந்தப் பேச்சில் இடம்பெற்ற சில கருத்துகள் அவரது அரசியல் வருகை குறித்த விவாதத்தையும் சமூக வலைதளங்களில் கிளப்பின.
மகனைப் பற்றி தனுஷ் சொன்ன கதை
அதே நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், தனது மகன் லிங்காவுடன் சிறுவயதில் அடிக்கடி வீடியோ கேம் விளையாடிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். பொதுவாக இரண்டு ஆட்டங்களில் தானே வெற்றி பெறுவதாகவும், மூன்றாவது ஆட்டத்தை மகனுக்காக விட்டுக்கொடுப்பதாகவும் அவர் கூறினார். ஒருமுறை எல்லா ஆட்டங்களிலும் தானே வெற்றி பெற்றபோது, "நான் இன்னும் ஜெயிக்கவே இல்லையே" என்று லிங்கா மீண்டும் விளையாட அழைத்ததாகவும் தனுஷ் தெரிவித்தார். அந்த அனுபவத்தை குறிப்பிட்ட அவர், வாழ்க்கையில் எவ்வளவு சவால்கள் வந்தாலும் வெற்றி பெறும் வரை தொடர்ந்து போராட வேண்டும் என்பதே அதன் பாடம் என்று ரசிகர்களிடம் வலியுறுத்தினார்.
லெஸ் பிரவுன் பேச்சை காப்பியடித்த தனுஷ் ?
இந்த வீடியோ வைரலான நிலையில், லெஸ் பிரவுன் பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோவையும் இணையவாசிகள் பகிரத் தொடங்கினர். அதில் தனது மகனுடன் கேம் விளையாடியது, மகனின் தன்னம்பிக்கையை உயர்த்துவதற்காக திட்டமிட்டு தோல்வியை ஏற்றுக்கொண்டது உள்ளிட்ட சம்பவங்களை அவர் விவரித்திருந்தார்.
இரண்டு வீடியோக்களையும் ஒப்பிட்டு வெளியிடப்படும் பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. சம்பவத்தின் மையக் கருத்து மட்டுமின்றி, அதை விவரிக்கும் விதத்திலும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், "இது வெறும் தற்செயலான ஒற்றுமையா அல்லது லெஸ் பிரவுனின் உரையால் ஈர்க்கப்பட்டு சொல்லப்பட்ட கதையா?" என்ற விவாதம் இணையத்தில் தீவிரமடைந்துள்ளது.
